தடுப்புச்சுவர் இல்லாத குவாரி ரோட்டோரம் விபத்து அபாயம்
திருச்சுழி: திருச்சுழி அருகே ஆலடிபட்டி செல்லும் ரோடு அருகில் கல் குவாரி தடுப்புச்சுவர் இல்லாமல் இருப்பதால் வாகனங்கள் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது ஆலடிபட்டி ஊராட்சி. இந்த ஊரைச் சுற்றி இருபதுக்கு மேற்பட்ட கல் குவாரிகள் உள்ளன. இங்கிருந்து டன் கணக்கில் கற்கள் கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன. 24 மணி நேரமும் நூற்றுக்கணக்கான லாரிகள் வந்து செல்கின்றன. ஆலடிபட்டி ரோடு அருகில் ஒருசில கல்குவாரிகள் தடுப்புச் சுவர் இல்லாமல் உள்ளன. ரோட்டிற்கு மிக அருகில் உள்ளதால் இரவு நேரங்களில் வந்து செல்லும்போது வாகனங்கள் விழுந்துவிடும் அபாயத்தில் உள்ளது. வெளியூர்களிலிருந்து இருந்து வருபவர்கள் கவனமாக வரவில்லை என்றால் குவாரிக்குள் விழுந்து விட நேரிடும். பயன்படாத இந்த கல்குவாரிகளை சுற்றிலும் தடுப்புச் சுவர் அமைத்து பாதுகாப்பான அமைப்பை ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.