உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு தனி வார்டு

விருதுநகர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு தனி வார்டு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சீதோஷ்ண நிலை தொடர்ந்து மாறி வருவதால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் காய்ச்சல் சிகிச்சைக்கு தனி வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் வெயில், மாலையில் மழை என சீதோஷ்ண நிலையில் தொடர்ந்து மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. இவை பெரும்பாலும் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள காலி இடங்களில் தேங்கி நிற்பதால் எளிதாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.உள்ளாட்சி அமைப்புகளும் நீர் தேங்கும் இடங்களில் எண்ணெய் பந்துகளை வீசி கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கைகளை போதிய அளவில் எடுக்கவில்லை. மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்டத்தில் தீவிரப்படுத்தாமல் இருப்பதால் வைரஸ் காய்ச்சல் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 30 முதல் 50 பேர் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால் உள்நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை அளிப்பதற்காக 30 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்களுக்கு 10 படுக்கைகள், பெண்களுக்கு 10, குழந்தைகளுக்கு 10 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மருத்துவர் அன்புவேல் கூறியதாவது: பொதுவாக அக்டோபர் முதல் பிப்ரவரி வரை வைரஸ் காய்ச்சல் பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலை இருக்கும். தொண்டை வலி, தும்மல், தடுமம், வயிற்று போக்கு, நீர்சத்து குறைதல் ஆகியவை அறிகுறியாகும். தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு மூன்று நாள்கள் மாத்திரை கொடுத்து குணப்படுத்தி விடலாம்.ஒரு வேளை குணமடையாத பட்சத்தில் பரிசோதனை மூலம் எந்த வகையான காய்ச்சல் என கண்டறிந்து அதற்கு உரிய சிகிச்சைகள் அளித்து குணப்படுத்த முடியும். ஆனால் உடல்வலி, கை, கால் மூட்டு வலி ஒரு வாரம் வரை இருக்கும். மருந்து, மாத்திரைகள், நீராகார உணவுகள், ஒய்வு எடுத்துக்கொண்டால் குணமடைந்து விடலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை