உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு விடுதிகளில் தாசில்தார் குழுக்களின் தரம் ஆய்வு என்னாச்சு: சுவையற்ற உணவால் வெளியில் சாப்பிடும் மாணவர்கள்

அரசு விடுதிகளில் தாசில்தார் குழுக்களின் தரம் ஆய்வு என்னாச்சு: சுவையற்ற உணவால் வெளியில் சாப்பிடும் மாணவர்கள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சுவையற்ற உணவு வழங்கப்படுவதாகவும், மாணவர்கள் வெளியில் ஓட்டலில் சாப்பிடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தரம் குறித்து தாசில்தார்கள் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுக்கள் ஆய்வு செய்கின்றனவா என்பது சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது.மாவட்டத்தில் 47 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி, 56 ஆதிதிராவிடர் நல விடுதிகள் உள்ளன. இவற்றில் முன்பு அதிகளவில் மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது பல்வேறு காரணங்களால் மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டது. இந்நிலையில் தற்போது குறைந்த எண்ணிக்கையில் இயங்கும் மாணவர்களுக்கான விடுதிகளும் ஆங்காங்கே கல்லுாரி விடுதிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. இதனால் ஊரகப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.இந்த மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகங்கள், கையேடுகள், 3 வேளை உணவு ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும் வார்டன் நிலையில் ஒரு ஆசிரியர் எப்போதும் இங்கு இருப்பர். ஒரு விடுதிக்கு ஒரு மாதத்திற்கு வழங்கும் பராமரிப்பு படியானது மிக குறைவாக உள்ளது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின் இந்த விடுதிகளுக்கென தாலுகா வாரியாக தாசில்தார்கள் தலைமையில் குழு நிர்ணயித்தது. அந்த குழுக்கள் தற்போது என்ன செய்கின்றன என தெரியவில்லை. தற்போது பல விடுதிகளில் சுவையற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறைந்த மளிகை பொருட்களை கொண்டு உணவு பொருட்கள் தயார் செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. மேலும் விடுதிகளில் சாப்பிட முடியாமல் மாணவர்கள் வெளியே ஓட்டலுக்கு சென்று சாப்பிடும் நிலை உள்ளது. இங்கு படிப்போர் பெரும்பாலும் ஏழை மாணவர்கள் என்பதால் தினசரி ஓட்டலில் உண்ண முடியாது.ஒரு சில அரசு மாணவர் விடுதிகளில் தரைத்தளம், கதவுகள், சுவர்கள் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இன்னொரு பக்கம், வார்டன், காவலாளி, சமையலர் காலிப்பணியிடங்களும் அதிகளவில் உள்ளன. நியமிக்கப்பட்ட தாசில்தார் குழுக்கள் எந்த ஆய்வும் செய்யாமல் உள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் இது தொடர்பான தெளிவான நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி