உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நீர்வரத்து ஓடைகளில் குவியும் கட்டடக் கழிவுகள் சிக்கல்: மழை பெய்தும் பலனில்லாமல் போகும் அபாயம்

நீர்வரத்து ஓடைகளில் குவியும் கட்டடக் கழிவுகள் சிக்கல்: மழை பெய்தும் பலனில்லாமல் போகும் அபாயம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நீர்வரத்து ஓடைகளில் கட்டட கழிவுகளை இரவோடு இரவாக கொட்டி குவிப்பதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது மழை பெய்தும் பலனில்லாமல் நீரானது வெவ்வேறு பகுதிகளுக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் நீர்வழித்தடங்கள் மிகவும் முக்கியமானவை. இதில் பல குடியிருப்பு, வணிக நிறுவனங்கள், ஆலைகளின் ஆக்கிரமிப்பிலும், நகரின் ஊடா ஓடும் நீர்வரத்து ஓடைகள் கழிவுநீர் கால்வாய்களாகவும் மாறி உள்ளன. இதனால் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தாமல் வேதனைக்குரியதாக உள்ளது. இந்த சூழலில் தற்போது புதர்மண்டி, கருவேலம் சூழ்ந்து பயனின்றி கிடக்கும் நீர்வரத்து ஓடைகளில் குப்பை கொட்டுவதை போல் கட்டட கழிவுகளை கட்டுவதும் அதிகரித்துள்ளது. புதிதாக வீடு கட்டும் பணியின் போது பழைய கட்டட கழிவுகளை முறைப்படி நகராட்சி நிர்வாகங்களிடமோ, உள்ளாட்சி அமைப்புகளிலோ வழங்காமல் உள்ளனர். ஊராட்சிகளில் கட்டட கழிவுகளை சேமிக்க எந்த வழியுமில்லை. இதனால் இரவோடு இரவாக நீர்வரத்து ஓடைகளில் கட்டட கழிவுகளை குவித்து செல்கினறனர்.தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. பெய்யும் நீரானது வழித்தடங்கள் மூலம் கண்மாய்கள், ஊருணிகள் செல்ல பெரிய தடையாக கருவேல மரங்கள் உள்ளன. அப்படி இருக்கும் பட்சத்தில் இது போன்று கொட்டப்படும் கட்டட கழிவுகளும் நீரின் திசையை மாற்றி விடுகின்றன. இது போன்று செய்வதால் தான் அளவுக்கு மீறி அதீத கனமழை பெய்யும் போது நீரானது வழித்தடம் மாறி குடியிருப்புக்குள் புகுந்து விடுகிறது.கடந்த ஆண்டு டிச. 17, 18ல் பெய்த கனமழையில் குடியிருப்புகளுக்குள் நீர் புக காரணம் இது போன்ற நீர்வரத்து ஆக்கிரமிப்புகள் தான். இந்தாண்டு இன்னும் அதிகரித்துள்ளது. விவசாயிகள் கூறுகையில், “இது போன்ற செயல்பாடுகளால் கண்மாய்கள், நீர்நிலைகள் வறண்ட நிலையிலே தான் இருக்கும். வரத்து ஓடைகளை மழைக்காலத்திற்கு முன்பே சரி செய்து துார்வார வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்த போதிலும், எதற்கும் செவிசாய்க்காமல் துறை அதிகாரிகள் இருந்து வருகின்றனர். விளைபொருள்கள் உற்பத்தி இருந்தால் தான் எதிர்கால தலைமுறைக்கு உணவு இருக்கும். நிலம் ஆரோக்கியமாக இருக்க விவசாயம் அவசியம். எனவே நீர்வரத்து ஓடைகளில் இது போன்ற கட்டட கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். கடுமையான அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ