தீபம் ஏற்றுவது உரிமை
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தை துவக்கி வைத்து கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது: ஜன., 7 கட்சியின் மாநில மாநாட்டிற்கு பின் அனைத்து மண்டலங்களிலும் தொழிற்சங்க கிளைகள் தொடங்கப்படும். போக்குவரத்துத்துறை தனியார்மயமாகி வருகிறது. பல ஆண்டுகளாகியும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்கவில்லை. போக்குவரத்துத் துறையில் பல்வேறு குளறுபடிகளால் ஊழல் மலிந்துள்ளது. எஸ்.ஐ.ஆர்., விவகாரத்தில் தி.மு.க., பல லட்சம் பேரை போலி வாக்காளர்களாக சேர்த்துள்ளனர். அவர்களை நீக்கினால் பாதிப்பு ஏற்படும் என எதிர்த்தே கூட்டணி கட்சியினரோடு சேர்ந்து போராட்டம் செய்து நீதிமன்றம் வரை சென்றனர். அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கில் எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. இந்த மலையும் முருகனுக்கு சொந்தமான இடம். அதில் தீபம் ஏற்றினால் என்ன தவறு. இது மண்ணின் மைந்தர்களின் உரிமை. இங்கு தீபம் ஏற்றுவது தமிழ் மண்ணோடு, மொழியோடு பின்னிப்பிணைந்த ஒரு கலாசாரமாக இருக்கிறது. இவ்விவகாரத்தில் தமிழக அரசு இவ்வளவு கடுமையாக நடந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது ஹிந்து- முஸ்லிம், ஹிந்து -கிறிஸ்தவ பிரச்னை அல்ல. இதில் தி.மு.க., அரசியல் செய்திருக்கக் கூடாது. தற்போது ஏன் இந்த பிரச்னையை தொட்டோம் என்ற நிலைக்கு வந்து கிரானைட் துாண், எல்லைக்கல், சமணர் துாண் என கூறிவிட்டு எதையும் நிரூபிக்க முடியாத நிலையில் தி.மு.க., அரசு உள்ளது. தீபத்துாணில் தீபம் ஏற்றும் உரிமை அனைவருக்கும் உள்ளது. 100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம் ஏற்புடையது அல்ல. வேலை நாட்களை 125 ஆக உயர்த்தினாலும் வேலை உத்திரவாதம் என்ற வார்த்தையை நீக்கியது சரியல்ல. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் தோல்விக்கு மாநில அரசின் தவறு மற்றும் ஊழலே காரணம் என்றார்.