உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் ரோடுகளில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

சிவகாசியில் ரோடுகளில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

சிவகாசி: சிவகாசி விளாம்பட்டி ரோடு, திருத்தங்கல் ரோடு, பைபாஸ் ரோடு உள்ளிட்ட நகரின் போக்குவரத்து நிறைந்த முக்கிய ரோடுகளில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்திற்கு வழி ஏற்படுகிறது. எனவே சிவகாசியில் லாரி முனையம் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில் இருப்பதால் அதிக அளவில் கனரக வாகனங்கள் வருகின்றன. சிவகாசிக்கு மூலப் பொருட்களை கொண்டு வருவதற்கும் உற்பத்தி பொருட்களைக் கொண்டு செல்வதற்காக தினமும் 200 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. ஆனால் இந்த வாகனங்களை தனியாக நிறுத்துவதற்கு என லாரி முனையம் இல்லை. இதனால் நகருக்கு சரக்குகள் ஏற்றி வருகின்ற கனரக வாகனங்கள் அனைத்தும் திருத்தங்கல் ரோடு, விருதுநகர் பழைய ரோடு, சாத்துார் ரோடு, பைபாஸ் ரோடு, வேலாயுத ரஸ்தா ரோடு உள்ளிட்ட போக்குவரத்து நிறைந்த இடங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் லாரிகளை நிறுத்தி விடுகின்றனர். ஒரே நேரத்தில் 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ரோட்டில் இருபுறமும் நிறுத்தப்படுவதால் பள்ளி கல்லுாரி பஸ்கள், நகர் பஸ்கள் இதனை கடப்பதற்கு பெரிதும் சிரமப்படுகின்றன. மேலும் டூவீலரில் செல்பவர்கள் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது. பட்டாசுகளை ஏற்றி செல்லும் லாரிகள் நகருக்குள் நிறுத்தப்படும் போது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு வாய்ப்பளிக்கும். தற்போது சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகின்றது. இதனால் நகரே போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. இந்நிலையில் கனரக வாகனங்களையும் போக்குவரத்து நிறைந்த ரோட்டிலேயே நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. எனவே சிவகாசியில் உடனடியாக லாரி முனையம் அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KOVAIKARAN
நவ 03, 2025 19:14

சிவகாசி ஒரு திட்டமிடப்படாத UNPLANNED TOWN சிறிய நகரம். அறுபது ஆண்டுகளுக்கு முன் அது ஒரு பெரிய கிராமம். அங்கே எல்லா சாலைகளும், தெருக்களும் மிகவும் குறுகியது. விரிவாக்கம் செய்ய முடியாது. பட்டாசு உற்பத்தி அதிகரித்ததால் புற்றீசல் போல டவுணுக்குள்ளும் ஆங்காங்கே பட்டாசு தயாரிக்கும் நூற்ருக்கணக்கான சிறிய தொழிற்சாலைகள் இருக்கின்றன. அதனால் போக்குவரத்து அதிகமாகி உள்ளது. தற்போது சிவகாசி டவுனுக்கு வெளியில் தான் சாலைகள் கொஞ்சம் அகலமாக இருக்கும்படி அமைத்துள்ளார்கள். சிவகாசியில் வணிக ரீதியில் பொருளாதாரம், மற்றும் மக்களின் வாழ்வாவாதரம் உயர்ந்த அளவிற்கு சாலை போன்ற வசதிகளை அதிகரிக்க முடியவில்லை என்பதே உண்மை.


சமீபத்திய செய்தி