உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாக்காளர் பட்டியல்  சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி 

வாக்காளர் பட்டியல்  சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி 

விருதுநகர்; விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல்களை சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது துவங்கி உள்ளது. 2026 ஜன.1ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்பு தீவிரத் திருத்த பணிகளை துவங்க இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களான தாசில்தார்கள், மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள் ஆகியோருக்கு கலெக்டர் அலுவலகத்தில் அக். 9ல் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தத்தின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் பணிகள் குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது. வாக்காளர்களின் விபரங்கள் அச்சிடப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்களை ஒவ்வொரு வாக்காளருக்கும் வீடு வீடாகச் சென்று வழங்கி, அப்படிவங்களில் வாக்காளர்கள் கையொப்பம் பெற்று அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டிருந்தவர்கள் அப்படிவங்களுடன் எந்த ஆவணத்தையும் இணைக்கத் தேவையில்லை என்றும், மற்றவர்கள் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆவணங்களில் ஒன்றை இணைத்து அளிக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டது. கணக்கெடுப்புப் படிவம், இணைப்பு ஆவணங்களை வலைதளம் மூலமாக வாக்காளர்கள் சுயமாக பதிவேற்றம் செய்யவும் முடியும் என்றும், 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை www.virudhunagar.nic.inஎன்ற விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பார்த்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கான கால அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டவுடன் அனைத்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் இதே போன்ற பயிற்சிகளை அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலர்கள் அளிப்பர் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி