உரங்கள் விவரத்தில் வெளிப்படை வேண்டும்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட உரங்கள் குறித்து வெளிப்படை வேண்டும். தென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளை ஈ பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.விருதுநகரில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், வேளாண் இணை இயக்குனர் விஜயா, நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், தோட்டக்கலை துணை இயக்குனர் சுபா வாசுகி பங்கேற்றனர்.கூட்டத்தில் நடந்த விவாதம்:ஓ.ஏ.நாராயணசாமி, தமிழ்விவசாயிகள் சங்கம்: விருதுநகர் ஆமத்துாரில் வண்டிப்பாதை, இரு நீர்வரத்து ஓடைகளை ஆக்கிரமித்துள்ளனர். வருவாய்த்துறையினர் சர்வே செய்து ஆக்கிரமிப்பு என உறுதி செய்து விட்டனர். இருப்பினும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை.இதற்கு நடவடிக்கை கோரி தரையில் அமர்ந்து விவசாயிகள் கோஷம் எழுப்பினர். கலெக்டரை ராஜினாமா செய்யக்கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற போது, இது விவசாயிகளுக்கும், கலெக்டருக்கும் இடையிலான பிரச்னை போலீஸ் தேவையில்லை என கோஷம் எழுப்பினர். இதனால் கூட்டம் துவங்க தாமதம் ஆனது.கலெக்டர் ஜெயசீலன் வந்த பிறகு பேச்சுவார்த்தை நடத்தி ஆர்.டி.ஓ., சிவக்குமாரிடம் விளக்கம் கேட்டார்.ஜெயசீலன், கலெக்டர்: டி.ஆர்.ஓ., மூலம் நோட்டீஸ் அனுப்பப்படும். ஆக்கிரமிப்பை எடுக்காவிட்டால் ஒரு வாரத்திற்குள் அகற்றப்படும், என உறுதி அளித்தார். போராடிய விவசாயிகள் கலைந்து சென்றனர்.ராமச்சந்திரராஜா, தமிழக விவசாயிகள் சங்கம்: கிசான் நநிதியில் 45 சதவீதம் பேர் விவசாய அடையாள அட்டை பதிந்துள்ளனர். இதன் பணி வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை மட்டும் செய்துள்ளனரே தவிர வருவாய்த்துறை ஒருங்கிணைந்து செயல்பட வில்லை. இதனால் கூட்டுப்பட்டாவில் இருப்போருக்கு அடையாள அட்டை கொடுக்க முடியவில்லை. இத்திட்டத்தை காலநீட்டிப்பு செய்ய வேண்டும். தென்னை ஏறும் தொழிலாளர்களுக்கு காப்பீடு திட்டம் செயல்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட உரங்கள் விவரத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.சக்திகணேசன், தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர்: 7 உரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.ஜெயசீலன், கலெக்டர்: அத்தியாவசிய பொருள் நிர்ணய சட்டத்தில் ஒரு கம்பெனி தொடர்ந்து இரு முறை தரம் குறைவாக உற்பத்தி செய்தால் அதை தடை செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட உரங்கள் குறித்து செய்திக்குறிப்பு வழங்குங்கள்.ராமமூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்துார்: ராஜபாளையம் கொத்தன்குளம் கண்மாய் வரத்துக்கால்வாயில் அப்பகுதி குடியிருப்போர் கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும். அதே கால்வாயில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை விரைந்து அகற்ற வேண்டும். மாவட்டம் முழுவதும் ஒன்றிய கண்மாய்களுக்கு நிதி ஒதுக்கி பராமரிக்க வேண்டும்.நிறைகுளம், ஸ்ரீவில்லிபுத்துார்: பொன்னாங்கண்ணி கண்மாயில் ஆக்கிரமிப்பு உள்ளது. அகற்ற வேண்டும்.கணேசன், சிவகாசி: ஆனைக்குட்டம் பாசன ஆயக்கட்டு பரப்பில் வாடியூர் கிராமத்தின் 300 ஏக்கருக்கு விவசாய நிலங்களை சேர்க்க வேண்டும். கன்னிசேரியில் தடுப்பணை அமைக்க வேண்டும்.விஜயமுருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: தென்னையில் வெள்ளை ஈ பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, ராஜபாளையம் பகுதி விவசாயிகள் அல்லல்படுகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். விரைந்து வெள்ளை ஈ கட்டுப்படுத்த தீர்வு காண வேண்டும்.ஜெயசீலன், கலெக்டர்: கோவை வேளாண் ஆராய்ச்சி பல்கலையில் இருந்து விஞ்ஞானி குழு வர கோரிக்கை வைக்கப்படும். வெள்ளை ஈ பாதிப்பு ஏற்பட்ட மரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும்அம்மையப்பன், சேத்துார்: மா விவசாயத்திற்கு காப்பீடு வேண்டும்.சுபாவாசுகி, தோட்டக்கலை துணை இயக்குனர்: அரசுக்கு கோரிக்கை அனுப்ப உள்ளோம்.ஞானகுரு, ஸ்ரீவில்லிபுத்துார்: மம்சாபுரம் - செண்பகத்தோப்பு ரோடு போட்டு தர வேண்டும். பருவநிலை மாற்றத்தால் மா பூக்கள் உதிர்வதால் நிவாரணம் வழங்க வேண்டும்.கர்ணன், ஸ்ரீவில்லிபுத்துார்: காயல்குடி ஆற்றில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி, வன்னியம்பட்டி இடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.ஜெயசீலன், கலெக்டர்: நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுவது என்பது கூட்டுபொறுப்பு. அதிகாரிகள் அகற்ற வரும் போது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதிகாரிகளுக்கு உறுதுணையாக விவசாய சங்கங்கள் நின்றால் தான் தைரியமாக ஆக்கிரமிப்பை அகற்ற முடியும்.ராம்பாண்டியன், அருப்புக்கோட்டை: மாவட்ட நிர்வாகம் இதற்கு எழுத்துப்பூர்வ உத்திரவாதம் அளிக்க வேண்டும். அருப்புக்கோட்டை சாயல்குடி ரோட்டில் உள்ள முத்து ஊருணி பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு செல்லும் ரோடு 2011ல் மெட்டல் ரோடாக மாற்றப்பட்டது. தற்போது எந்த பராமரிப்பும் செய்யப்படாமல் மோசமான நிலையில் உள்ளது. விளைபொருட்களை எடுத்து செல்ல முடியவில்லை.அழகர்சாமி, திருத்தங்கல்: குறிஞ்சிக்குளம் கண்மாயின் கருவேல முட்களை அகற்றி விவசாயத்திற்கு பயன்பட உதவ வேண்டும்.ஜெகதீசன், சிவகாசி: சிவகாசி செவலுாரில் ஊருணி அருகே குப்பை பிரிக்கும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் மழைக்காலம் வந்தால் ஊருணி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.லெட்சுமணப்பெருமாள், திருச்சுழி: வடபாலை நெல் பெயர் பெற்றது. தற்போது கண்மாய் மடை சேதத்தால் விவசாயம் செழிப்பு இழந்துள்ளது. இதை சீரமைத்து விவசாயத்தை மீட்டுத்தர வேண்டும். இது குறித்து முன்பே கோரிக்கை வைத்துள்ளேன். விரைந்து பணிகளை துவங்க வேண்டும்.பெருமாள், திருச்சுழி: திருச்சுழி தொப்பலாக்கரை கஞ்சம்பட்டி பகுதிகளில் உள்ள நிலத்தடிநீரால் பலர் சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.ஜெயசீலன், கலெக்டர்: ஒரு மாதத்திற்குள் உங்கள் பகுதிக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தாமிரபரணி குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.