கட்டுக்கடங்கா நாய்த்தொல்லை; தாங்க முடியல
விருதுநகர்: விருதுநகரின் கொளுத்தும் வெயிலிலும் வீதிகளை சுற்றி வலம் வரும்நாய்களால் வாகன ஓட்டிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. காலை நடைபயிற்சி செய்வோரை துரத்துவதால் பலர் பாதிக்கப்படுகின்றனர். விருதுநகர் நகராட்சியில்பெரும் அச்சுறுத்தலாக மாறி வருவது நாய் தொல்லை தான். கருத்தடை ஊசி, நாய் வண்டி போன்ற நடவடிக்கைகள் சில மாதங்களே எடுக்கப்பட்டது. தற்போது எந்த நடவடிக்கையும் இல்லை. எவ்வித தடுப்பு பணிகள் இல்லாததால் நாய்கள் அதிகளவில் மீண்டும் பெருகி வருகின்றன. இதனால் அவை நாட்பட தெருவில் சுற்றி திரிந்து அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளை தாக்கி விபத்தை ஏற்படுத்துகின்றன. இன்னொரு பக்கம் வெறிநாயாக மாறி மக்களை கடித்து ரேபிஸ் நோயை பரப்பு கின்றன. ரேபிஸ் பாதித்த நாய்கள் ஏற்கனவே குடிநீர் குடிக்க முடியாத சூழலில் இருக்கும், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் வெறி மக்களை தாக்க வாய்ப்புள்ளது. நகரின் மெயின் ரோடுகளில் இந்த நாய்கள் அதிகளவில் உலா வருவதோடு திடீரென வாகனங்களின் குறுக்கே விழுந்து விபத்தை ஏற்படுத்துகிறது. காலை நடைபயிற்சி செய்வோரையும் கும்பலாக துரத்துகின்றன. இதை கட்டுப்படுத்த கால்நடைத்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றோடு இணைந்து தேவையான கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய் தொல்லையால் நாய்களை கொல்வதாக கூறுவதல்ல தீர்வு. அவற்றை கருத்தடை செய்து, வெறிநாய்க்கடி ஊசி போட்டு விடுவது தான் தீர்வு. இதன் மூலம் ரேபிஸ் பரவாது, புதிய நாய்களும் பெருகாது.