கழிவு நீர் தேக்கம், அகற்றப்படாத குப்பை--
ராஜபாளையம்; கழிவு நீர் செல்ல வழியில்லை, கொசு தொல்லை, மெயின் ரோட்டுக்கு பாதை இல்லை, அகற்றப்படாத குப்பை உட்பட பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி மேலப்பாட்டம் கரிசல்குளம் அம்பேத்கர் நகர் குடியிருப்போர் தவித்து வருகின்றனர்.ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் மேலப்பாட்டம் கரிசல்குளம் அம்பேத்கர் நகர் பகுதியில் குடியிருப்போர், துரைராஜ் கவிக்குமார், தமிழரசி, கனகா, முத்துலட்சுமி, உஷா, வேளாங்கன்னி கூறியதாவது:குடியிருப்பு உருவாகி 50 வருடங்கள் ஆகின்றன. பத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ள நிலையில் பொம்மக்கா கோயில் தெரு ஒட்டியுள்ள மூன்று தெருகளுக்கு மெயின் ரோட்டுடன் முறையான இணைப்பு இல்லை. அதிக மேடாக அமைந்துள்ள இங்கு கழிவு நீர் கடந்து செல்ல வழி இன்றி தேக்கமடைகிறது. மேற்கே ராஜூக்கள் கல்லுாரி பகுதி தொடங்கி பல்வேறு குடியிருப்பு பகுதியில் இருந்து வழிந்து செல்லும் கழிவுநீர், மழைநீர் வெளியேறும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாவதுடன் ரோட்டின் அடுத்த பகுதியை கடந்து செல்ல போடப்பட்ட குழாய் அருகே தேங்கி நிற்கிறது.குடியிருப்பில் சுற்றி கழிவுகள் தேக்கத்தால் பகலிலும் கொசு தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. கொசு ஒழிப்பு பணிகளும் நடைபெறவில்லை. ஏற்கனவே உள்ள வாறுகாலில் கழிவுகள் அகற்றுவது இல்லை. வீடுகளில் சேரும் குப்பை சேகரிப்பும் மறுசுழற்சியும் நடைபெறாமல் அருகாமை பகுதியில் கொட்டி தீ வைப்பது நடக்கிறது. இதனால் காற்று மாசு மூச்சுத் திணறல் சிக்கல் ஏற்படுகிறது.புதிய தெருக்களை முறையான வாறுகாலுடன் அமைக்க வேண்டும். மெயின் ரோட்டில் அசுர வேகத்தில் பறக்கும் வாகனங்களால் பயத்துடன் கடக்க வேண்டி உள்ளது. வேகத்தடைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.தேவைப்படும் இடங்களில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தாததுடன் பழுதானால் மாற்றுவது இல்லை. ஏற்கனவே கண்மாய் ஒட்டி உள்ளதால் அடிக்கடி விஷ ஜந்துகள் தொல்லை உள்ளதுஅணைத்தலை ஆற்றில் இருந்து சப்ளை ஆகும் தண்ணீர் போர்வெல் நீருடன் கலந்து அனுப்புவதால் குடிநீரை விலைக்கு வாங்குகிறோம். தெருக்களுக்கு சப்ளையிலும் குளறுபடி ஏற்பட்டு வருகிறது.முறையான வாறுகால் இன்றி வெளியேற்றப்படும் கழிவு நீரோடு மழைநீர் ஆங்காங்கு தேங்கி நிற்பதால் பகல் நேரங்களிலும் கொசு தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றோம். கொசு ஒழிப்பு பணிகள் தொடர வேண்டும்.தற்போது சமீபமாக உருவான குடியிருப்புகளும் அனைத்து வசதிகள் பெற்று வரும் நிலையில் அடிப்படைத் தேவைகளுக்காக ஏங்கி நிற்கிறோம்.தேவைகள் குறித்து கிராம சபை கூட்டங்களில் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் வசதிகள் முழுமை அடையவில்லை. எனவே எங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை ஊராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றனர்.