சேத்துாரில் குழாய் உடைந்து பள்ளிக்குள் வழிந்தோடும் நீர்
சேத்துார் : சேத்துார் அரசு மேல்நிலைப் பள்ளிக்குள் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வழிந்தோடி வருவதை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சேத்துார் பேரூராட்சி 8 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சேத்துார் சேவுக பாண்டிய அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ளது.இந்நிலையில் ஆற்றிலிருந்து பேரூராட்சி குடியிருப்புகளுக்கு இவ் வழியாக செல்லும் தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது.பள்ளி நுழைவு வாயில் எதிரில் ஒன்றும், அதன் அருகே 30 அடி தொலைவில் மற்றொரு இடத்திலும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வழிந்தோடுகிறது. இந்நிலையில் பள்ளி நுழைவாயில் முன்பு ஏற்பட்ட உடைப்பிலிருந்து பெருகும் குடிநீர் பள்ளிக்குள் வழிந்து செல்வதால் தண்ணீர் தேங்குவதுடன் சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி குடியிருப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.