அரசு மருத்துவமனைகளில் தனியார் ஊழியர்களுக்கு வார விடுப்பு, மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் விடுப்பு தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை அவசியம்
விருதுநகர்: அரசு மருத்துவமனைகளில் தனியார் ஒப்பந்தத்தில் பணிபுரியும் துாய்மை, பாதுகாப்பு பணியாளர்களுக்கு வார விடுப்பு, மாதத்தில் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. விடுப்பு எடுத்தால் ஊதிய பிடித்தம் செய்வதே தொடர்கிறது. தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஒப்பந்த தொழிலாளர்களின் நலன் காக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, தாலுகா அரசு மருத்துவமனைகளில் தனியார் ஒப்பந்தத்தில் துாய்மை, பாதுகாப்பு பணிகளில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பணியாளர்கள் வெளிநோயாளிகள் பிரிவு, வார்டுகள், ஆப்ரேஷன் தியேட்டர், வளாகத்தை சுத்தமாக வைத்திருத்தல் உள்பட பல்வேறு மருத்துவ பிரிவுகளில் பணிபுரிகின்றனர். இவர்களை ஒப்பந்தம் முறையில் தேர்வு செய்து பணி வழங்கிய நிறுவனம் பணியாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு, மாதத்தில் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை என சுழற்சி முறையில் வழங்க வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக ஒப்பந்த நிறுவனத்தினர் பணியாளர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய வாரவிடுப்பு, மாதத்தில் ஒரு நாள் ஊதியத்துடன் விடுப்பு என எதுவும் வழங்குவதில்லை. மாறாக பணியாளர்களை ஒரு நாளைக்கு 9 மணி நேரத்திற்கும் அதிகமாக பணிபுரிய வைப்பததால் பலருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற் பட்டுள்ளது. பணியாளர்கள் உடல்நிலை சரியில்லை என ஓரிரு நாள் விடுப்பு எடுத்தால், அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் நடைமுறை பல ஆண்டுகளாக தொடர்கிறது. தமிழகம் முழுவதும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் காலக்கெடு மே மாதத்துடன் முடிந்தது. புதிதாக ஒப்பந்தம் எடுத்து தனியார் நிறுவனம் அனைத்து சட்டப்படியான பலன்களும் வழங்கப்படும் என ஆரம்பத்தில் பணியாளர்களிடம் தெரிவித்தது. ஆனால் புதிய தனியார் நிறுவனமும் வழக்கம் போல வாரவிடுப்பு, மாதத்தில் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை என எதுவும் வழங்காமல் போக்கு காட்டி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் பல ஆண்டுகளாக நடக்கும் தொழிலாளர் விரோத போக்கு குறித்து நலத்துறை அதிகாரிகள் எவ்வித ஆய்வும் இதுவரை செய்ததில்லை. இதனால் தனியார் ஒப்பந்தம் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அரசின் விதிகளை மீறி பணியாளர்களை வேலை வாங்குகின்றனர். எனவே அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் நேரடியாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வார விடுப்பு, மாதத்தில் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.