உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  பள்ளி வளாகங்களில் அலுவலகங்கள் பாதிக்கப்படும் கற்றல் பணிகள் தீர்வு எப்போது

 பள்ளி வளாகங்களில் அலுவலகங்கள் பாதிக்கப்படும் கற்றல் பணிகள் தீர்வு எப்போது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி வளாகங்களில் உள்ள அரசு அலுவலகங்களால் கற்றல் பணிகள் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. இதற்கு தீர்வு எப்போது என ஆசிரியர்கள் குமுறுகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் சில பள்ளிகளின் வளாகங்களில் அரசின் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. விருதுநகர் சுப்பையா நாடார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடக்கல்வித்துறை அலுவலகம், ஆர்.எம்.எஸ்.ஏ., அலுவலகம், தேர்வுத்துறை இணை இயக்குனர் அலுவலகம் செயல்படுகிறது. அதே போல் சிவகாசி அண்ணாமலையம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் டி.இ.ஓ., அலுவலகமும், ஏ.வி.டி., அரசு துவக்க, உயர்நிலைப்பள்ளிகளில்வட்டாரக்கல்வி அலுவலகமும் செயல் படுகிறது. இதே போல் இன்னும் சில வட்டார கல்வி அலுவலகங்கள் அரசு பள்ளிகளின் வளாகங்களில் தான் உள்ளன. பள்ளி வளாகங்களில் அலுவலகங்கள் இருக்க கூடாது என்ற அரசாணையே உள்ளது. ஆனால் இதுவரை அதை எந்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறையும் அமல் படுத்தவே இல்லை. இன்று வரை அது தீராத தலைவலியாகவே உள்ளது. ஒவ்வொரு முறை அலுவலகங்களுக்கு ஆட்கள் வந்து கொண்டே இருப்பதுடன், உயரதிகாரிகள் யாரேனும் வந்தால் வளாகத்தில் உள்ள பள்ளிக்கும் ஆய்வு செய்கின்றனர். அடிக்கடி நடக்கும் ஆய்வுகளால் ஆசிரியர்கள், மாணவர்கள் துவண்டு போய் உள்ளனர். இந்த அரசாணையை முறைப்படி அமல்படுத்தினால் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படாது. கவனக்குறைவு ஏற்படுகிறது.ஏற்கனவே வட்டார கல்வி அலுவலகங்கள் தவிர பிற டி.இ.ஓ., ஆர்.எம்.எஸ்.ஏ., கல்வி அலுவலகங்களை ஒருங்கிணைந்த கல்வி வளாகமாக அமைக்கலாம் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. அவ்வாறு செய்வதன் மூலம் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களின் பணிகளும் எவ்வித சுணக்கமும் இன்றி வேகமாக முடியும். அலுவலர்களை கண்காணிப்பதும், சீருடை, புத்தகங்கள் வழங்குவதில் உள்ள குளறுபடிகளும் தவிர்க்கப்படும். இதை மாவட்ட நிர்வாகம் சரி செய்ய வேண்டும். அரசாணையை நடைமுறைப்படுத்த தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !