உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரூ.பல லட்சம் செலவில் கட்டப்பட்ட அரசு கட்டடங்கள் பாழ் திறக்காமல் பயன்பாட்டிற்கு கொண்டு வராதது ஏன்

ரூ.பல லட்சம் செலவில் கட்டப்பட்ட அரசு கட்டடங்கள் பாழ் திறக்காமல் பயன்பாட்டிற்கு கொண்டு வராதது ஏன்

மாவட்டத்தில் மக்களின் தேவைகளை அறிந்து, அதற்கு ஏற்ப, அரசு பல்வேறு திட்டங்களின் கீழ், நிதி ஒதுக்கீடு செய்து, கட்டடங்கள் கட்டுகின்றன. சுகாதார வளாகம், மின் மயானம், அங்கன்வாடி, அலுவலக கட்டடங்கள், நுாலக கட்டடங்கள், மகளிர் சுய உதவி குழு கட்டடங்கள், சமுதாய கூடம் என மக்கள் பயன்பாட்டிற்காக பல்வேறு கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அடிப்படை வசதிகள், அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு, அரசு விதிகளுக்கு உட்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதில் பெரும்பாலான கட்டடங்கள் தரமில்லாமல் கட்டப்படுவதுடன், அடிப்படை வசதிகளை சரிவர செய்வது கிடையாது. அத்தியாவசிய தேவையான குடிநீர் வசதி, மின் இணைப்பு பெறாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். இது போன்ற கட்டடங்கள் ரூ.பல லட்சங்கள் செலவு செய்து கட்டப்பட்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாமல் போகிறது. குறிப்பாக கிழவனேரியில் சுகாதார வளாகம், காரியாபட்டி, மல்லாங்கிணரில் மின் மயானம் என கட்டப்பட்டும், திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு, அரசு நிதி ரூ.பல லட்சங்கள் வீணடிக்கப்படுகின்றன. கட்டி முடிக்கப்பட்டு தரச் சான்றிதழ் பெற முடியாமல் பல கட்டடங்கள் கிடப்பில் போடப்படுகின்றன. கட்டடங்கள் வீணாகி வருவதுடன் சமூக விரோத செயல்கள் நடக்கும் இடங்களாக மாறுகின்றன. நாளடைவில் கட்டடங்கள் சேதமடைகின்றன. பின் திறக்கப்படாத கட்டடங்களுக்கு, பராமரிப்பு பணி என நிதி ஒதுக்கீடு செய்து, பணி செய்கின்றனர். மக்கள் பயன்பாட்டிற்கு வராத கட்டடங்களை ஏன் ரூ.பல லட்சங்கள் செலவு செய்து கட்ட, பராமரிக்க வேண்டும், அரசு நிதி வீணடிக்க வேண்டும் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அந்தந்த பகுதிகளில் என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பதை அறிந்து, அதற்கு ஏற்ப தேவையான கட்டடங்களை தரமாக பயனுள்ள வகையில் கட்டி, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ