மதுரை அரசு மருத்துவமனையில் சிசு இறப்பை தடுக்கக் கோரி வழக்கு: அரசு தரப்புக்கு ஐகோர்ட் உத்தரவு
மதுரை :மதுரை அரசு மருத்துவமனையில் சிசு இறப்பைத் தடுக்க, தீவிர சிகிச்சைப் பிரிவை விரிவாக்க கட்டடத்திற்கு மாற்றி, போதிய பேராசிரியர்கள், நர்ஸ்கள், வென்டிலேட்டர், எக்ஸ்ரே வசதி செய்ய கோரிய வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டது.
மதுரை சமநீதி அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஆனந்த்ராஜ் தாக்கல் செய்த பொது நல வழக்கு:அரசு மருத்துவமனையில் 2008ல் பிரசவ காலத்தில் 68 கர்ப்பிணிகள், பிறந்த 761 சிசுக்களும் இறந்தனர். 2009ல் முறையே 74 கர்ப்பிணிகள், 413 ஆண் மற்றும் 294 பெண் சிசுக்களும் இறந்தனர். 2010ல் அதிகபட்சமாக 887 சிசுக்கள் இறந்தன. மாதம் சராசரியாக 50 சிசுக்கள் இறக்கின்றன.இறப்புக்குக் காரணம் போதிய டாக்டர்கள், பேராசிரியர்கள், நர்ஸ்கள், உயிர் காக்கும் கருவிகள் இல்லாதது தான். இங்கு 20 சிசுக்கள் இருக்குமிடத்தில் 80 சிசுக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. தென் மாவட்ட சிசுக்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் இங்கு சிகிச்சை பெறுகின்றன. தினமும் 90 சிசுக்கள் சிகிச்சை பெறுகின்றன. குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவிலுள்ள இரு வார்டுகளில், 20 சிசுக்கள் மட்டும் சிகிச்சை பெற முடியும். ஆக., 25ல் 91 சிசுக்கள் சிகிச்சையில் இருந்தன. குழந்தைகள் நல பிரிவில் ஆண்டுக்கு ஆறாயிரம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தென் தமிழகத்தில் சிசுக்களுக்கான தீவிர சிகிச்சை பிரிவு இங்கு மட்டும் உள்ளது. இங்குள்ள தரத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற 20 ஆயிரம் ரூபாய் ஆகும். சிசு தீவிர சிகிச்சைப் பிரிவில் 4 பேராசிரியர்கள், 6 துணை பேராசிரியர்கள், 24 நர்ஸ்கள் நியமிக்க வேண்டும். 80 வென்டிலேட்டர், மானிட்டர், பல்ஸ் ஆக்சினோ மீட்டர், சிரின்ஜ், பம்ப், நகரும் எக்ஸ்ரே, ஸ்கேன் கருவிகளை அமைக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி,''பெரும்பாலான சிசுக்கள் மூச்சுத் திணறலால் இறக்கின்றன. இடைக்காலமாக 40 வென்டிலேட்டர்களை வாங்கி வைக்க உத்தரவிட வேண்டும்,'' என்றார்.அதை பதிவு செய்த நீதிபதிகள், இதுகுறித்து அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க, அரசு பிளீடர் ராஜா கார்த்திகேயனுக்கு உத்தரவிட்டனர். விசாரணையை செப்., 12க்கு தள்ளிவைத்தனர்.