வெளிநாட்டில் மனைவியை அடித்து, உதைத்த இந்தியர்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
புதுடில்லி: 'வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர், அங்கு குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும், அவருக்கு எதிராக இந்தியாவில் விசாரணை நடத்த முடியும்' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்தவர் தோட்டா வெங்கடேஸ்வரலு. இவர், தன் மனைவி சுனிதாவுடன், போஸ்ட்வானாவில் வசித்து வந்தார். இவரின் மனைவி சுனிதா, சமீபத்தில் போஸ்ட்வானாவில் இருந்து, ஆந்திராவுக்குத் திரும்பினார். ஆந்திராவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில், வெளிநாட்டில் வசிக்கும்போது தன் கணவர் வரதட்சணை கேட்டு, தன்னை கொடுமைப்படுத்தியதாகப் புகார் தெரிவித்தார். ஆந்திராவில் உள்ள கூடுதல் முன்சீப் கோர்ட்டில், இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து, வெங்கடேஸ்வரலு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 'வெளிநாட்டில் நடந்த ஒரு சம்பவத்துக்காக, இந்தியாவில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க முடியாது. எனவே, என் மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்' என கூறியிருந்தார். இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், சிரியாக் ஜோசப், எஸ்.எஸ்.நிஜார் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்தியாவில் வசிக்கும் ஒருவர், இங்கு குற்றச் செயலில் ஈடுபட்டால், அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அதே நடவடிக்கையை, அவர் வெளிநாட்டில் செய்த குற்றச் செயல்களுக்கும் எடுக்க முடியும். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர், வெளிநாட்டில் குற்றம் செய்தால், அவருக்கு எதிராக இந்தியாவில் விசாரணை நடத்த முடியும். அதேநேரத்தில், இந்த விசாரணையைத் துவங்குவதற்கு முன், மத்திய அரசிடம் அதற்கான அனுமதியைப் பெற வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.