விசாரணை கைதி இறந்த சம்பவம்: காவலர்கள் மீது நடவடிக்கை: அரசு பதில்
சென்னை: கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதி இறந்த சம்பவம் தொடர்பாக, சிறைக் காவலர்கள் மற்றும் அலுவலர்கள் 11 பேர் மீது, குற்றவியல் மற்றும் துறை நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டில் அரசு தரப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சென்னை, புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில், அமுல்பாபு என்ற அமல் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின், கடலூர் சிறைக்கு 2009ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி மாற்றம் செய்யப்பட்டார். சிறையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமுல்பாபுவை, கடலூர் அரசு மருத்துவமனைக்கு, ஆகஸ்ட் மாதம் கொண்டு சென்றனர். ஆனால், அமுல்பாபு இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்; உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரி, ஐகோர்ட்டில் வழக்கறிஞர் புகழேந்தி மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதி அரிபரந்தாமன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட உத்தரவு: சாட்சிகள், ஆவணங்கள், டாக்டர்களின் கருத்துப்படி, தற்கொலை முயற்சி செய்து அமுல்பாபு இறக்க வாய்ப்பில்லை. சிறையில் அடித்து துன்புறுத்தப்பட்டு, அதனால் இறப்பதற்குரிய சாத்தியக்கூறுகள் உள்ளதால், அவரின் இறப்பு கொலை தான். சிறைவாசி அமுல்பாபு இறப்பதற்கு முன், பணியில் இருந்த சிறைக் காவலர்கள் எம்.பாலசுப்ரமணியன், சிவக்கொழுந்து, சிவப்பிரகாஷ், மந்திரமூர்த்தி, கணேசன், எம்.ராமகிருஷ்ணன், எம்.மருதபாண்டியன், துணை சிறை அலுவலர் சேகர், சிறை சோதனை அலுவலர்கள் ஜெகநாதன், நடராஜன், உதவி சிறை அலுவலர் ஜெயராமன் ஆகியோர் மீது, குற்றவியல் மற்றும் துறை நடவடிக்கைகளும், தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறைவாசிக்கு கிடைக்கக் காரணமாக இருந்த ஜெகநாதன், நடராஜன், ஜெயராமன் மீது, கூடுதலாக துறை நடவடிக்கை மேற்கொள்ள அரசு முடிவெடுத்தது. இவர்கள் மீது குற்றவியல் மற்றும் துறை நடவடிக்கை மேற்கொள்ள, கடலூர் மாவட்ட கலெக்டர், கூடுதல் டி.ஜி.பி., மற்றும் சிறைத் துறை தலைவர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இவ்வழக்கு விசாரணையை நீதிபதி அரிபரந்தாமன் தள்ளிவைத்தார்.