ஆரக்ஷான் படத்திற்கு விதித்த தடை நீக்கும்படி உ.பி., அரசுக்கு உத்தரவு
புதுடில்லி: 'ஆரக்ஷான்' திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும்படி, உ.பி., மாநில அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அமிதாப் பச்சன் நடித்த, 'ஆரக்ஷான்' திரைப்படம், இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக இருப்பதாகக் கூறி, உ.பி., பஞ்சாப், ஆந்திரா உள்ளிட்ட மாநில அரசுகள், அந்த படத்தை வெளியிட தடை விதித்தன. இதை எதிர்த்து, படத்தின் தயாரிப்பாளர் பிரகாஷ் ஜா, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் முகுந்தகம் சர்மா, ஏ.ஆர். டாவே ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பஞ்சாப், ஆந்திரா மாநிலங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,'இந்த படத்தை திரையிட அனுமதி அளிக்கலாம் என, ஏற்கனவே முடிவு எடுத்து விட்டோம்' என்றனர்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: 'ஆரக்ஷான்' திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதித்து, மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவுகள் சரியானதல்ல. இந்த தடை உத்தரவு, ஜனநாயகத்தின் ஆதாரமாக விளங்கும், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதாக உள்ளது. ஜனநாயகத்தில், குறிப்பாக நம்மைப் போன்ற துடிப்பான ஜனநாயகத்தில், பொது விவாதம், கருத்து வேறுபாடுகள் போன்றவை அவசியம் இருக்க வேண்டும். இதுபோன்ற விவாதங்கள், சமூக விஷயங்களில், விழிப்புணர்வை ஏற்படுத்தும். ஜனநாயக நடவடிக்கைகள் சிறப்பாக செயல்பட, இது மிகவும் அவசியம். எனவே, இந்த படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை, உ.பி., அரசு நீக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
படம் சொல்வது என்ன?
* 'ஆரக்ஷான்' திரைப்படத்தில், அமிதாப், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.* கடந்த 12ம் தேதி இந்த திரைப்படம், நாடு முழுவதும் வெளியானது.* அரசு வேலைகளிலும், கல்வி நிலையங்களிலும் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டை மையமாக வைத்து, இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.* இந்த படம், இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக இருப்பதாகக் கூறி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.* போராட்டங்களை அடுத்து, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில், இந்த படத்துக்கு தடை விதிக்கப்பட்டது.* தற்போது இந்த தடையை நீக்கும்படி, உ.பி., மாநில அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.