கொலை மிரட்டல் வழக்கில் டி.எஸ்.பி.,க்கு முன்ஜாமின்: ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை : மதுரை மாவட்டம் எழுமலை அருகே வாரப்பத்திரிக்கை நிருபர் பாண்டியனை கொலை செய்வதாக மிரட்டிய வழக்கில் திருவண்ணாமலை குற்றப்பதிவேடு டி.எஸ்.பி., குமாரவேலுக்கு, ஐகோர்ட் கிளை நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது.
பாண்டியன் செய்தி வெளியிட்டது குறித்து அவரை கொலை செய்வதாக மிரட்டி, தாக்கியதாக தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டுசுரேஷ், அவரது சகோதரர் சரவணன், அப்போதைய நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் குமாரவேலு, எஸ்.ஐ., பார்த்திபன் மீது எழுமலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.வழக்கில் முன்ஜாமின் கோரிய குமாரவேலு மனு நேற்று நீதிபதி ஆர்.மாலா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் எம்.அஜ்மல்கான், ஆர்.காந்தி ஆஜராயினர். முன்ஜாமின் வழங்க அரசு கூடுதல் வக்கீல் ராமர் ஆட்சேபம் தெரிவித்தார். இருப்பினும் முன்ஜாமின் வழங்கிய நீதிபதி, ''2009ல் நடந்த சம்பவத்திற்கு தாமதமாக 2011ல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தாமதத்திற்கு காரணம் தெரிவிக்கப்படவில்லை. எனவே மனுதாரருக்கு முன்ஜாமின் வழங்கப்படுகிறது. அவர் திருவண்ணாமலை முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தினமும் கையெழுத்திட வேண்டும்,'' என்றார்.