ஐகோர்ட் கிளை எல்லை வழக்கு: சென்னை வக்கீல்கள் ஆஜராக உத்தரவு
மதுரை: ஐகோர்ட் கிளை எல்லைக்கு உட்பட்ட வழக்குகளை, மதுரையில் விசாரிக்கக் கோரிய பொது நல வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து, செப்., 26ல் நேரில் ஆஜராகி, கருத்துத் தெரிவிக்க சென்னை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டனர்.
மதுரை மாவட்டம், மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின் தாக்கல் செய்த பொது நல வழக்கில், 'ஐகோர்ட் கிளையில் மதுரை உட்பட, 13 தென் மாவட்ட வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இந்த மாவட்ட வழக்குகள், சென்னையில் தாக்கல் செய்யப்படுகின்றன. அதை, நீதிபதிகளும் விசாரிக்கின்றனர். இதனால், ஐகோர்ட் கிளை துவக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாது. ஐகோர்ட் கிளை எல்லை வழக்குகளை, மதுரையில் தான் விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என கோரினார். நேற்று, வழக்கு நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. சென்னை ஐகோர்ட் பதிவாளர் சார்பில், மூத்த வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி ஆஜரானார். வழக்கறிஞர் சங்கங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருப்பதால், அவர்களது கருத்தைக் கேட்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர். பின் நீதிபதிகள், ''சென்னை அனைத்து வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் கஸ்டம்ஸ் சென்ட்ரல் எக்சைஸ் பார் நிர்வாகிகள், செப்., 26 ல் ஆஜராகி கருத்து தெரிவிக்க வேண்டும்'' என உத்தரவிட்டனர்.