விவசாயி உடலுக்கு மீண்டும் பிரேத பரிசோதனை: ஐகோர்ட்
மதுரை : புதுக்கோட்டையில் போலீஸ் விசாரணைக்கு சென்று சிறையில் அடைக்கப்பட்டு இறந்த விவசாயின் உடலை மீண்டும் பரிசோதனை செய்ய மதுரை அரசு ஆஸ்பத்திரி டீனுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை கணேஷ்நகர் சுதா தாக்கல் செய்த ரிட் மனு: கணவர் சின்னப்பா; விவசாயி. இரு குழந்தைகள் உள்ளனர். கணவர் மீது புதுக்கோட்டை, அறந்தாங்கியில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. கணவர், ஜூலை 7ல் சுந்தர்ராஜன் என்பவருடன் அறந்தாங்கி கோர்ட்டிற்கு சென்றார். அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. டி.எஸ்.பி., கலியபெருமாள் தலைமையில் 15 போலீசார், கணேஷ்நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஜூலை 7ல் கணவரை அழைத்து சென்றனர். மறுநாள் அவரை திருகோகர்ணம் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். அவரை போலீசார், கடுமையாக தாக்கினர். அவரை சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதாக உயரதிகாரிகளுக்கு தந்தி கொடுக்கப்பட்டது. இதனால், கணவரை குற்ற வழக்கில் சிறையில் அடைத்தனர். பின், புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்து போனார்.
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஜூலை 10ல் அவரது உடலை எங்களிடம் காட்டாமல், பிரேத பரிசோதனை செய்தனர். அதை வீடியோ எடுக்கவில்லை. அவரது உடல் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் உள்ளது. அதை புதைக்க, எரிக்க போலீசாருக்கு தடை விதிக்க வேண்டும். மீண்டும் எங்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ராகுல், பொன். முருகேசன் ஆஜராயினர். நீதிபதி எஸ்.மணிக்குமார், ''திருச்சி அரசு ஆஸ்பத்திரியிலுள்ள மனுதாரரின் கணவர் உடலை மீண்டும் பரிசோதனை செய்ய டாக்டர்கள், தடய அறிவியல் நிபுணர் கொண்ட குழுவை மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் நியமிக்க வேண்டும். மனுதாரர் உறவினர்கள் முன்னிலையில் பரிசோதனை நடத்த வேண்டும். அதை வீடியோ கிராப் செய்ய வேண்டும். இதுகுறித்த அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்,'' என்றார்.