உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதுச்சேரியில் ஆறு மாதங்களில்உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவு

புதுச்சேரியில் ஆறு மாதங்களில்உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவு

சென்னை:'புதுச்சேரியில் ஆறு மாதங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் வி.பெருமாள் தாக்கல் செய்த மனுவில், 'மாநில தேர்தல் கமிஷனர் இன்னும் நியமிக்கப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தலை நடத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக் காலம், ஜூன் மாதத்துடன் முடிந்து விட்டது. மாநில தேர்தல் கமிஷனரை நியமிக்கவும், உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.மனுவை, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி வாசுகி அடங்கிய 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.ஸ்டாலின், அரசு தரப்பில் அரசு பிளீடர் சீனிவாசன் ஆஜராகினர். புதுச்சேரி அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆறு மாதங்கள் தேவைப்படுகிறது. மாநில தேர்தல் கமிஷனரை நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சில அதிகாரிகள், அரசின் பரிசீலனையில் உள்ளனர். விரைவில் இறுதி முடிவெடுத்து, நியமிக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில், 'உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த ஆறு மாதம் தேவைப்படுகிறது என, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் நடவடிக்கைகளை துவங்கி, முடிவுகளை வெளியிட வேண்டும். ஆறு மாதங்களுக்குள் அரசும், அதிகாரிகளும் இதை முடிக்க வேண்டும்' என, கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !