நுகர்வோர் கோர்ட்களில் வழக்குகள் அதிகரிக்கும் பின்னணி என்ன?
வாகனங்கள் காணாமல் போனால், நஷ்டஈடு கோரி காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக சிவில் கோர்ட்டுகளில் வழக்கு தொடுப்பதற்குப் பதில், நுகர்வோர் கோர்ட்டுகளை நாடுவது அதிகரித்துள்ளது. வழக்குகளில் விரைந்து தீர்வு கிடைப்பதும், நிவாரணம் கிடைப்பதும் தான் இதற்கு காரணம்.
சேவை குறைபாடு என்கிற அடிப்படையில் தான், நுகர்வோர் கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்படுகிறது. நுகர்வோர் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், நுகர்வோர் கோர்ட்டுகளில் தாக்கலாகும் வழக்குகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. அதுமட்டுமல்லாமல், நுகர்வோர் கோர்ட்டுகளில் தாக்கலாகும் வழக்குகளில் 90 நாட்களுக்குள் தீர்ப்பு கூற வேண்டும் என நுகர்வோர் சட்டம் கூறுகிறது. அந்த கெடுவுக்குள் தீர்ப்பு வழங்க முடியாவிட்டாலும், விரைந்து தீர்ப்பளிக்கின்றனர். நுகர்வோர் கோர்ட்டுகளில், வாகனங்கள் திருடு சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிகம் தாக்கல் ஆவதாக கூறப்படுகிறது. வாகனங்கள் பொதுவாக காப்பீடு செய்யப்படுகிறது. ஒரு வாகனம் திருடு போனால், அந்த வாகனத்துக்காக காப்பீடு (இன்சுரன்ஸ்) செய்யப்பட்ட நிறுவனம், இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். இழப்பீடு வழங்கவில்லை என்றாலோ அல்லது கேட்ட தொகைக்கு குறைவாக வழங்கினாலோ, வாடிக்கையாளர்கள் சிவில் கோர்ட்டை நாடலாம். ஆனால், நுகர்வோர் கோர்ட்டுகளுக்கு தான் அவர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர்.
சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும் என்றால், நஷ்டஈடு கோரும் தொகையில் ஏழரை சதவீதத்தை கட்டணமாக செலுத்த வேண்டும். அதுபோக வழக்கறிஞருக்கு கொடுக்க வேண்டிய கட்டணம் தனி. ஆனால், நுகர்வோர் கோர்ட்டில் கட்டணம் செலுத்துவது மிகவும் குறைவு. வழக்கறிஞரே இல்லாமல், நுகர்வோரே நேரில் ஆஜராகி முறையிடலாம். மேலும், சிவில் கோர்ட்டில் வழக்கு தொடுத்தால், அதற்கு எப்போது தீர்வு கிடைக்கும் என சொல்ல முடியாது. ஆனால், நுகர்வோர் கோர்ட்டில் எப்படியும் ஓராண்டுக்குள் தீர்ப்பு கிடைத்து விடும் என அடித்துக் கூறுகின்றனர் வழக்கறிஞர்கள்.
நுகர்வோர் கோர்ட்டுகளில் ஒரு லட்சம் வரை நஷ்டஈடு கோரும் வழக்கு என்றால், அதற்கு கட்டணம் 100 ரூபாய் தான். ஒன்று முதல் ஐந்து லட்சம் வரை 200 ரூபாய், ஐந்து முதல் 10 லட்சம் என்றால் 400 ரூபாய், பத்தில் இருந்து 20 லட்சம் என்றால் 500 ரூபாய், 20 லட்சம் முதல் 50 லட்சம் என்றால் 2,000 ரூபாய், 50 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரைக்கும் 4,000 ரூபாய் என கட்டணம் விதிக்கப்படுகிறது. அதுவே சிவில் கோர்ட்டுகள் என்றால், ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு கோரினால், அதற்கு ஏழரை சதவீத கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணத்துக்கு 10 லட்சம் ரூபாய் நஷ்டஈடு கோரினால், நுகர்வோர் செலுத்த வேண்டிய கட்டணம் 75 ஆயிரம் ரூபாய். வழக்கில் வெற்றி பெற்றால், கட்டணம் திரும்பக் கிடைக்கும். அதுவே, நுகர்வோர் கோர்ட் என்றால், செலுத்த வேண்டிய கட்டணம் வெறும் 400 ரூபாய் தான்.
நுகர்வோர் கோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் செயலர் கே.குமரன் கூறும்போது, 'காப்பீட்டு நிறுவனங்கள் நிராகரிக்கும் முறையீடுகளை எதிர்த்து, நுகர்வோர் கோர்ட்டுகளில் ஏராளமான வழக்குகள் தொடரப்படுகின்றன. இவ்வழக்குகளில் பெரும்பாலும் ஓராண்டுக்குள் தீர்வு கிடைக்கிறது' என்றார். வாகனங்கள் திருடு போனால், உடனடியாக போலீசார் வழக்கு பதிவு செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. இதையே காரணமாக வைத்து காப்பீட்டு நிறுவனங்கள், நஷ்டஈட்டுத் தொகை வழங்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ் கூறும் போது, 'வாகனங்கள் காணாமல் போனதாக புகார்கள் வந்தால், உடனடியாக போலீசார் வழக்கு பதிவு செய்வதில்லை. காலதாமதம் செய்து தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. மேலும், உடனடியாக காப்பீட்டு நிறுவனத்துக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். காப்பீட்டு நிறுவனங்களின் புலனாய்வு அதிகாரிகள் வந்து விசாரணை நடத்துவர். தாமதமான முதல் தகவல் அறிக்கை என்றால், காப்பீட்டு நிறுவனங்கள் முறையீட்டை நிராகரிக்கின்றன. இதில் சேவை குறைபாடு எழுவதால், நுகர்வோர் கோர்ட்டுகளை நாடுகின்றனர். வசதிபடைத்தவர்கள், பெரிய நிறுவனங்கள் தான் சிவில் கோர்ட்டை நாடுகின்றனர். மற்றபடி சாதாரண நபர்கள் எல்லாம் நுகர்வோர் கோர்ட்டுகளை தான் நாடுகின்றனர். இதில் கட்டணம் குறைவு. வழக்கறிஞரும் அவசியமில்லை' என்றார்.
- நமது சிறப்பு நிருபர் -