அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமின் மனு விசாரணை: செப்.12க்கு ஒத்திவைப்பு
தூத்துக்குடி : வக்கீல்களின் கோர்ட் புறக்கணிப்பால், அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஜாமின் மனு விசாரணை, செப்.,12க்கு ஒத்திவைக்கப்பட்டது.ஆறுமுகநேரி நகர தி.மு.க., செயலர் சுரேஷை கொலை செய்ய தூண்டியது உள்ளிட்ட மூன்று வழக்குகளில், திருச்செந்தூர் தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், ஆறுமுகநேரி போலீசால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இம்மூன்று வழக்குகளிலும் ஜாமின்கோரி, அவர் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை நேற்று நீதிபதி பிரபுதாஸ் முன்னிலையில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் சந்திரசேகர் ஆஜரானார். ஆனால், டில்லி ஐகோர்ட் வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பை கண்டித்து வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்ததால், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் வக்கீல்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, ஜாமின் மனு மீதான விசாரணையை, செப்.,12ம்தேதிக்கு (நாளை மறுநாள்) நீதிபதி ஒத்திவைத்தார்.