| ADDED : ஜூலை 15, 2011 12:53 AM
சிவகங்கை:அரசு கல்லூரிகளில் கடந்த ஆண்டு புதிதாக துவக்கிய இளங்கலை, முதுகலை வகுப்பிற்கு பேராசிரியர்களை நியமிக்க, ஆசிரியர் பணியிட விபரத்தை அரசு சேகரித்து வருகிறது.தமிழகத்தில் 69 அரசு கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில், இரண்டு ஷிப்ட்களாக வகுப்புகள் நடக்கின்றன. இக்கல்வியாண்டில் இளங்கலை மாணவர்கள் சேர்க்கை முடிந்துள்ளது. முதுகலை சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடக்கிறது. கல்லூரிகளில் பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக 2வது ஷிப்டிற்கு தேவையான கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.கூடுதல் ஆசிரியர்கள் : தி.மு.க., ஆட்சியில், கடந்த கல்வி ஆண்டுகளில், அனைத்து கல்லூரிகளிலும் இளங்கலை, முதுகலை வகுப்புகளில் புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டன. ஆனால், இதற்குரிய பேராசிரியர்கள் நியமிக்கவில்லை. இந்த அரசு கல்லூரிகளில் ஆசிரியர் காலிபணியிடம் இருக்க கூடாது என்ற நோக்கத்தில், பேராசிரியர்களை நியமித்து வருகிறது.விபரம் சேகரிப்பு :இதையடுத்து, கடந்த கல்வி ஆண்டுகளில் புதிதாக துவக்கப்பட்ட பாடப்பிரிவுகள், அதில் எத்தனை ஆசிரியர்கள் தேவைப்படும் என்பது போன்ற விபரங்களை அரசு கல்லூரிகள் மூலம் சேகரித்து வருகிறது.இது குறித்து கல்லூரிகள் கல்வி இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறுகையில், ''புதிய பாடப்பிரிவுகளுக்கு கடந்த கல்வி ஆண்டில் ஆசிரியர்கள் நியமிக்கவில்லை. இதனால், மாணவர்கள் கல்வி கற்பதில், சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, அரசு புதிய பாடப்பிரிவிற்கான ஆசிரியர் தேவை விபரங்களை சேகரித்து வருகிறது,'' என்றார்.