இருமல் மருந்துக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து
சென்னை :இருமல் மருந்து, 'பினைல் புரபனோலாமின்'க்கு விதிக்கப்பட்ட தடையை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இப்பிரச்னையை மீண்டும் பரிசீலித்து முடிவெடுக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனம், 'சிப்லா!' இந்த நிறுவனம், பல மருந்து வகைகளை தயாரிக்கிறது. இதன் தயாரிப்பில் ஒன்றான, 'பினைல் புரபனோலாமின்' எனும் மருந்து, இருமல், சளி, மூக்கடைப்பு, சுவாசப் பிரச்னைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதித்து, மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் உத்தரவு பிறப்பித்தது.இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், சிப்லா நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவில், 20 ஆண்டுகளாக இந்த மருந்தை விற்பனை செய்து வருவதாகவும், மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, இம்மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவை நீதிபதி தனபாலன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.மாசிலாமணி ஆஜரானார். நீதிபதி தனபாலன் பிறப்பித்த உத்தரவு:மத்திய அரசு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன், நிபுணர்கள் அமைப்பான மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழு மற்றும் மருந்து ஆலோசனைக் குழுவின் கருத்துக்களை பெறவில்லை. ஒரு விஷயத்தில் முழு திருப்தியடைவதற்கு முன், உத்தரவு பிறப்பிக்க முடியாது.இந்த மருந்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் பொது மக்களுக்கு துன்பம் ஏற்படும் என யூகித்துக் கொண்டாலும், பொதுநலனை கருத்தில் கொண்டு முதலில் அரசு ஒரு முடிவுக்கு வர வேண்டும். அரசு திருப்தியடையாமல், ஒரு மருந்துக்கு தடை விதிப்பதை ஏற்க முடியாது.எனவே, 'பினைல் புரபனோலாமின்' மருந்தைப் பொறுத்தவரை, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் இப்பிரச்னையில் புதிதாக முடிவெடுக்க, மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. சட்டம் மற்றும் பொது மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு, மனுதாரருக்கும் சந்தர்ப்பம் வழங்கி, தகுந்த உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி தனபாலன் உத்தரவிட்டுள்ளார்.