ஜீவனாம்சத் தொகை தராத கணவனுக்கு "பிடிவாரன்ட்
சென்னை: ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, மனைவிக்கும், குழந்தைக்கும் ஜீவனாம்சத் தொகையைத் தராத கணவனுக்கு, சென்னை குடும்ப நல கோர்ட், 'பிடிவாரன்ட்' பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த புஷ்பராணிக்கும், சேலம் மாவட்டம் செங்கவல்லி தாலுகாவைச் சேர்ந்த சேகர் என்பவருக்கும், 2004 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, ஒரு குழந்தையும் உள்ளது. கணவருக்கு எதிராக, குடும்ப நல கோர்ட்டில், புஷ்பராணி மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 'திருமணம் நடந்த நாள் முதல், என்னை துன்புறுத்துகிறார். நான் கர்ப்பம் அடைந்திருப்பது தெரிந்தும், என்னை விட்டு விட்டு, சொந்த ஊருக்குச் சென்று விட்டார். எங்களைச் சேர்த்து வைக்க, பெரியவர்கள் முயற்சித்தனர். 15 சவரன் நகை மற்றும் ரொக்கப் பணம் வேண்டும் என கேட்டார். என் மீது பொய்யான புகார்களைக் கூறி, நோட்டீஸ் அனுப்பினார். 'என் பெற்றோருடன் நானும், என் குழந்தையும் வசித்து வருகிறோம். எங்களைப் பார்க்க அவர் வரவில்லை. எங்களுக்கு உணவு, உடை, மருத்துவச் செலவுகளுக்கு பணம் தேவை. என் கணவர், மாதம், 9,000 ரூபாய் சம்பாதிக்கிறார். எங்களுக்கு மாதம் 6,500 ரூபாய் ஜீவனாம்சம் தர உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த சென்னை குடும்ப நல கோர்ட், மனைவிக்கும், குழந்தைக்கும் சேர்த்து, மாதம் 1,500 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. இந்தத் தொகையை, 2005ம் ஆண்டு ஜூலையில் இருந்து வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், ஜீவனாம்சத் தொகை, மொத்தம் 99 ஆயிரம் ரூபாயை, இதுவரை வழங்கவில்லை; ஜீவனாம்சத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என, குடும்ப நல கோர்ட்டில் புஷ்பராணியின் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் முறையிட்டார். இதையடுத்து, சேகரை கோர்ட்டில் ஆஜர்படுத்த, 'பிடிவாரன்ட்' பிறப்பித்து, சென்னை குடும்ப நல கோர்ட் நீதிபதி மஞ்சுளா உத்தரவிட்டார். விசாரணையை, வரும் 24 ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.