உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., எம்.எல்.ஏ., மீது 2வது வழக்கு:14ம் தேதி வரை சிறையிலடைக்க உத்தரவு

தி.மு.க., எம்.எல்.ஏ., மீது 2வது வழக்கு:14ம் தேதி வரை சிறையிலடைக்க உத்தரவு

கரூர்:தனியார் நிலத்தில் அரசு அனுமதி பெறாமல் நெரூர் ஆற்றுப்பகுதியில், மணல் அள்ளியதாக அரவக்குறிச்சி தி.மு.க., எம்.எல்.ஏ., பழனிச்சாமி மீது போடப்பட்ட இரண்டாவது வழக்கில், வரும் 14ம் தேதி வரை சிறையிலடைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ.,வாகவும், தி.மு.க., சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினராகவும் உள்ள பழனிச்சாமி மீது, மாயனூர் ஆற்றுப்பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளியதாக, வி.ஏ.ஓ., நீலமேகம், மாயனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில், கடந்த மாதம் 19ம் தேதி பழனிச்சாமி கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் இருக்கும் பழனிச்சாமி எம்.எல்.ஏ., அவரது உதவியாளர் சுந்தரேசன், கிரிராஜ் உள்ளிட்ட பலர் மீது, நெரூர் வடபாகம் பகுதியில் ராமசாமி அய்யர், முத்தையா என்பவருக்கு சொந்தமான இடத்தில், கடந்த டிசம்பர் 15ம் தேதி, அரசு அனுமதி பெறாமல் மணல் அள்ளியதாக, வி.ஏ.ஓ., தங்கராஜ், கடந்த 30ம் தேதி புகார் கொடுத்தார்.இதையடுத்து, மாயனூர் காவிரியாற்றில் மணல் அள்ளிய வழக்கு தொடர்பாக, திருச்சி சிறையில் உள்ள பழனிச்சாமியை, போலீசார் பலத்த பாதுகாப்போடு, கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, நேற்று அழைத்து வந்தனர்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பழனிச்சாமி எம்.எல்.ஏ.,வை, நெரூர் வடபாகம் பகுதியில் தனியார் நிலத்தில் அரசு அனுமதி பெறாமல் மணல் அள்ளிய வழக்கு தொடர்பாக, வரும் 14ம் தேதி வரை சிறையிலடைக்க மாஜிஸ்திரேட் அனுராதா உத்தரவிட்டார்.இதையடுத்து, மதியம் 1.05 மணிக்கு கரூர் கோர்ட்டில் இருந்து, பலத்த பாதுகாப்புடன் பழனிச்சாமி எம்.எல்.ஏ., வை, திருச்சி மத்திய சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.வீட்டு சாப்பாடு கிடைக்குமா?சிறையில் காரமான உணவு வழங்கப்பட்டதால், பழனிச்சாமி எம்.எல்.ஏ.,வுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து மருந்து, மாத்திரைகளை சிறை நிர்வாகம் அனுமதிப்பதில்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் வீட்டு உணவை அனுமதிக்க, மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை வைத்தோம்.அதற்கு, 'சிறைத்துறை அறிக்கையை கேட்டுப் பெற்ற பின், அதுபற்றி முடிவு செய்யப்படும்' என, மாஜிஸ்திரேட் அனுராதா தெரிவித்துள்ளார். நல்ல முடிவுக்காக காத்திருக்கிறோம், என்று பழனிச்சாமி எம்.எல்.ஏ.,வின் வழக்கறிஞர் மணிராஜ் நிருபர்களிடம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ