| ADDED : ஆக 06, 2024 12:56 AM
சென்னை:கொப்பரை கொள்முதலுக்கான நிலுவைத் தொகை 150 கோடி ரூபாயை வழங்காமல் இழுத்தடிக்கும், 'நாபெட்' நிறுவனத்தை முற்றுகையிட விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.இது குறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:தேங்காய் விலை 20 ரூபாயில் இருந்து, 10 ரூபாயாக குறைந்துள்ளது. இதனால், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்ந்து சிக்கலில் உள்ளது. மத்திய அரசு கொள்முதல் செய்யக்கூடிய கொப்பரைகளை, 'பாரத் தேங்காய் எண்ணெய்' என மதிப்பு கூட்டி விற்பனை செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக விவசாயிகள் போராடி வருகின்றனர். கொள்முதல் செய்யப்படும் 1 கிலோ கொப்பரைக்கு, 150 ரூபாய் வழங்கினால் மட்டுமே விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும். ஆனால், மத்திய அரசு 111 ரூபாய் மட்டுமே கொடுக்கிறது. இந்நிலையில், மத்திய அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தும் கூட்டமைப்பு என்ற, 'நாபெட்' வாயிலாக, 18,000 விவசாயிகளிடம் இருந்து, 150 கோடி ரூபாய்க்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கொள்முதல் செய்த கொப்பரைகளுக்கு வழங்க வேண்டிய பணத்தை தர, மூன்று மாதங்களாக நாபெட் நிறுவனம் காலம் தாழ்த்தி வருகிறது. கொள்முதல் செய்த நாளில் இருந்து, மூன்று நாட்களில் பணம் தர வேண்டும் என்பது விதி. இதை, நாபெட் நிறுவனம் கண்டுக்கொள்ளவில்லை. நிலுவை தொகையை விவசாயிகளுக்கு ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால், சென்னை எழும்பூரில் உள்ள நாபெட் தலைமை அலுவலகத்தின் முன், தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.