| ADDED : மே 16, 2024 01:34 AM
மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி சண்முகம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது. கந்தர்வகோட்டை அருகே சங்கம்விடுதி கிராம குடிநீர் தொட்டியில் ஏப்., 25ல் மாட்டு சாணம் கலக்கப்பட்டது. போலீசார் முறையாக விசாரிக்கவில்லை. குடிநீரில் மாட்டு சாணம் கலக்கப்பட்ட விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சில டீக்கடைகளில் இரட்டைக்குவளை முறையை ஒழிக்க வேண்டும். திருமண மண்டபங்களில் குறிப்பிட்ட சமூக மக்கள் நுழையவும், கூத்தங்குடி வைராண்டி கண்மாயை குறிப்பிட்ட சமூக மக்கள் பயன்படுத்த அனுமதிக்க நடவடிக்கை எடுக்க தமிழக உள்துறை முதன்மை செயலர், ஆதிதிராவிடர் நலத்துறை முதன்மை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். அந்த மனுவை நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.ராஜசேகர் அமர்வு விசாரித்தது.அரசு தரப்பில் 'சங்கம்விடுதி குடிநீர் தொட்டியில் சாணம் கலக்கப்படவில்லை. இது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. திருமண மண்டபங்கள் மற்றும் வைராண்டி கண்மாயை பயன்படுத்த தடுக்கப்படுவதாக யாரும் புகார் அளிக்கவில்லை. இரட்டைக் குவளை முறை நடைமுறையில் இல்லை' என அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது.. நீதிபதி: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. யாராவது கேள்வி எழுப்பினால் அவர்களுக்கு எதிராக பொய் வழக்கு பதியப்படுகிறது; குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். இரட்டைக்குவளை முறை சில இடங்களில் நடைமுறையில் உள்ளது. நீதிபதிகள்: குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்தது, இரட்டைக் குவளை முறை, திருமண மண்டபங்கள் மற்றும் கண்மாயை பயன்படுத்த குறிப்பிட்ட சமூக மக்களை தடுக்கும் புகார் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க வேண்டும். ஜூன் 4ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.