மோசடி நிதி நிறுவனத்தின் இயக்குநருக்கு 5 ஆண்டு சிறை
சென்னை : முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி, 18.39 லட்சம் ரூபாய் மோசடி செய்த, நிதி நிறுவனத்தின் இயக்கு நருக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2002ல், சென்னையை தலைமையிடமாக வைத்து, 'என்டோன்மென்ட் புராடக்ட்ஸ்' என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தின் இயக்குநர்களாக, அகர்வால், லாவண்யன், கணக்காளராக முரளீதரன் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இவர்கள் மூவரும், முதலீட்டாளர்கள் 250 பேரிடம், அதிக வட்டி தருவதாகக் கூறி, 18.39 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்தனர். இதுகுறித்து, சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சரவணன், சென்னை அசோக் நகரில் செயல்படும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து அகர்வால் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். பின், அவர்கள் ஜாமினில் வந்தனர். இந்த வழக்கு, சென்னை எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசின் சார்பில், வழக்கறிஞர் மோகன்மாரி ஆஜராகி தகுந்த ஆவணங்களை தாக்கல் செய்து வாதாடினார். நேற்று முன்தினம் இந்த வழக்கு, நீதிபதி கோதண்டராஜ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தகுந்த சாட்சியங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அகர்வாலுக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, 54.84 லட்சம் ரூபாய் அபராதம், மற்ற இருவருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.அகர்வாலுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை வசூலித்து, பாதிக்கப்பட்ட, 250 பேருக்கு, அவர்கள் முதலீடு செய்த பணத்திற்கு ஏற்றார் போல, அவரவர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.