முதல்வர் தலைமையில் இன்று தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டம்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., --- எம்.பி.,க்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.இது தொடர்பாக, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், 'தி.மு.க, லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் கூட்டம், கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில், இன்று காலை 10:30 மணிக்கு, சென்னை அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடக்கும். இதில், தி.மு.க., - எம்.பி.,க்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த ஜனவரி 31-ல் துவங்கியது. பிப்ரவரி 1ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பிப்ரவரி 13ல் கூட்டத்தொடரின் முதல் பகுதி முடிந்தது. அதன், இரண்டாவது பகுதி நாளை துவங்குகிறது.ஏப்ரல் 4ம் தேதி வரை நடக்கும் இந்த கூட்டத்தொடரில் வக்பு திருத்த சட்ட மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இவற்றுக்கு காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.மும்மொழிக் கொள்கைக்கு, தி.மு.க., கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. லோக்சபா தொகுதி மறுவரையறை தொடர்பாக, ஏழு மாநில முதல்வர்களின் கூட்டத்திற்கு, தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை, மத்திய அரசு வழங்க மறுப்பதாக தி.மு.க., குற்றஞ்சாட்டி வருகிறது. இது போன்ற பிரச்னைகளை, பார்லிமென்டின் இரு சபைகளிலும் எழுப்புவது குறித்து, தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்க இருப்பதாக தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.