பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு மற்றும் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்ட, பி.எப்.ஐ., எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் அரசியல் பிரிவு தான், எஸ்.டி.பி.ஐ., கட்சி என்ற புகார் எழுந்தது. இது குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவனம் மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், 2022ல் மத்திய உள்துறை அமைச்சகம், பி.எப்.ஐ., அமைப்பை தடை செய்தது. அதன் தலைவரான, கேரள மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரசாக் உடன், எஸ்.டி.பி.ஐ., கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பெய்சி, 55, நெருங்கிய தொடர்பில் இருப்பதும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது.இது தொடர்பான வழக்கில், கடந்த 3ம் தேதி, டில்லி விமான நிலையத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகளால் பெய்சி கைது செய்யப்பட்டார்.அவரிடம் பெற்ற வாக்குமூலம் அடிப்படையில், டில்லி மேற்கு நிஜாமுதீன் பகுதியில் உள்ள எஸ்.டி.பி.ஐ., கட்சியின் தலைமை அலுவலகம், கேரள மாநிலம் திருவனந்தபுரம், மலப்புரம், ஆந்திராவில் நந்தியால், கர்நாடக மாநிலம் பெங்களூரு, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா, உ.பி.,யில் லக்னோ, ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், தமிழகத்தில் சென்னை மண்ணடி, இப்ராஹிம் சாஹிப் தெரு உட்பட, 12க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள எஸ்.டி.பி.ஐ., கட்சி அலுவலகங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.சென்னையில் நடந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்; அங்கேயே தொழுகையும் நடத்தினர்.