உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவண்ணாமலையில் பூமிக்கடியில் தங்கம்: இந்திய புவியியல் ஆய்வுத்துறை தகவல்

திருவண்ணாமலையில் பூமிக்கடியில் தங்கம்: இந்திய புவியியல் ஆய்வுத்துறை தகவல்

சென்னை: இந்திய புவியியல் ஆய்வுத் துறையின் தமிழகம் மற்றும் புதுச்சேரி பிரிவு சார்பில், இந்திய புவியியல் ஆய்வுத் துறையின், 175வது நிறுவன தினத்தையொட்டி, ஓய்வுபெற்ற அதிகாரிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது.

சாத்தியக்கூறுகள்

அதில், பொது துணை இயக்குநர் அஜய்குமார் பேசுகையில், ''திருவண்ணாமலை உள்ளிட்ட சில பகுதிகளில், பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன,'' என்றார்.

பின், இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குநர் விஜயகுமார் அளித்த பேட்டி:

மழை, வெயில் போல நில அதிர்வும் இயற்கையானது தான். தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. சமீபகாலமாக நில அதிர்வின் பதிவு அதிகமாக உள்ளது. கருங்கல் பாறைகள் மீது சென்னை நகரம் அமைந்துள்ளது. அதனால், சென்னையில் நில அதிர்வு குறித்து பயப்பட வேண்டிய சூழல் இல்லை. ஆனால், கடலோர பகுதிகளை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அங்கு உயர்ந்த கட்டடங்கள் கட்டாமல் இருப்பது நல்லது. அங்கு நில அதிர்வு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் சில பகுதிகளில், தங்கம் மற்றும் இதர கனிம வளங்கள் உள்ளன.

அரசுக்கு அறிக்கை

நாடு முழுதும் உள்ள கனிம வளங்கள் குறித்து புவியியல் ஆய்வு நடத்தி, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புகிறோம். தமிழகத்தில் உள்ள கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்த போது, மொபைல் போன் பேட்டரிக்கு பயன்படுத்தப்படும், 'லித்தியம்' இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுகுறித்து, ஆய்வு செய்து வருகிறோம்.தமிழகத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் குறித்து, அரசிடம் ஏற்கனவே தெரிவித்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. புவியியல் குறித்து விளக்கும் வகையில், ஐந்து அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !