வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார் கவர்னர் தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டத்தில் தீர்மானம்
சென்னை:தமிழகத்தின் வளர்ச்சிக்கு கவர்னர் ரவி முட்டுக்கட்டை போடுவதாக, தி.மு.க., --- எம்.பி.,க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், அக்கட்சி எம்.பி.,க்கள் கூட்டம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், நாளை துவங்கவுள்ள பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.ஜனாதிபதி உரை மற்றும் மத்திய பட்ஜெட் மீதான விவாதங்களில், தி.மு.க., சார்பில் யார் யார் பேசுவது, எந்தெந்த பிரச்னைகளை முன்வைப்பது என்பது குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ↓கவர்னர் ரவி, மாநில அரசின் உரையை படிக்க மாட்டார்; தமிழ்த்தாய் வாழ்த்தை சிறுமைப்படுத்துவார்; சமஸ்கிருதம், ஹிந்தி புகழ் பாடுவார். கவர்னர் மாளிகையின் ஒட்டுமொத்த செலவும், மாநில அரசின் அதாவது மக்களின் வரிப் பணம். ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு வழிகாட்ட வேண்டியவர், எதிர்க்கட்சித் தலைவர் போல அரசியல் செய்கிறார். பல்கலைகளில் பா.ஜ., அரசியல் பிரசங்கம் செய்கிறார்.தமிழகத்தின் வளர்ச்சியிலோ, தமிழக மக்களின் நலனிலோ, தமிழகத்தின் பண்பாடு, கலாசாரத்திலோ, அரசியலமைப்பு சட்டத்தின் மீதோ, கவர்னருக்கு துளியும் நம்பிக்கை இல்லை. அவருக்கு இருக்கும் ஒரே ஆர்வம், வெகுஜன விரோத வலதுசாரி அரசியல் மட்டுமே.கவர்னராக ரவி இருப்பது, தமிழகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அமைந்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியை கெடுக்கவே, அவர் கவர்னராக அமர்ந்திருக்கிறார். குடியரசு தின வாழ்த்தில், தமிழக அரசை குறை சொல்லி, தமிழகத்தின் சிறப்பை சிறுமைப்படுத்தியுள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது.கவர்னர் பதவி நீக்கப்படும் வரை, அரசியல் மயமாகும் கவர்னர் பதவியின் கண்ணியத்தை காக்க, கவர்னர் எப்படி செயல்பட வேண்டும் என்ற நன்னடத்தை விதிகளை உருவாக்க வேண்டும். மாநில அரசின் கோப்புகள், சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களில் கையெழுத்திட, கவர்னருக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரில், இப்பிரச்னையை தி.மு.க., - எம்.பி.,க்கள் எழுப்புவர். ↓கூட்டாட்சி, மாநில கல்வி உரிமை, உயர் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல்கலை மானிய குழு, புதிய விதிகளை திரும்ப பெறக் கோரி, தி.மு.க., மாணவரணி சார்பில், பிப்ரவரி 6ல் போராட்டம் நடத்தப்படும். அன்று டில்லியில் தி.மு.க., - எம்.பி.,க்கள் போராட்டம் நடத்துவர்.எதிர்க்கட்சிகள் அளித்த திருத்தங்களை ஏற்காமல், சிறுபான்மையினர் நலனை பாதிக்கும் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற துடிக்கும் மத்திய பா.ஜ., அரசை கண்டிக்கிறோம்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.