கள்ளச்சாராய விற்பனை வழக்கு விபரங்களை கேட்கிறது ஐகோர்ட்
சென்னை:கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக, தமிழகம் முழுதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விபரங்களை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 66க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைகோரிய மனுக்கள், பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார்,நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வில், நேற்று விசாரணைக்குவந்தன. அரசு தரப்பில், அட்வகேட்ஜெனரல் பி.எஸ்.ராமன், தன் வாதத்தை தொடர்ந்தார்.அப்போது குறுக்கிட்ட முதல் அமர்வு, 'கள்ளச் சாராயம் குடித்தவர்களில், எத்தனை பேர் அரசுமருத்துவமனையில், எத்தனை பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறித்த விபரங்களை, புலன்விசாரணை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடாதது ஏன்? மாவட்ட எஸ்.பி., சஸ்பெண்ட் ரத்து எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது? மற்ற அதிகாரிகளுக்கும் ரத்து செய்யப்பட்டதா?' என, கேள்வி எழுப்பியது.அதற்கு, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதால், எஸ்.பி., சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டது; மற்ற அதிகாரிகளைப் பொறுத்தவரை, அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்கிறேன்,'' என்றார். தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, ''வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய கோரப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் தான், வன்கொடுமை தடுப்புச் சட்டம் பொருந்தும்,'' என்றார்.'முதலில் இருவர் பலியான போது, கள்ளச்சாராயம் காரணம் அல்ல என எந்த அடிப்படையில் கலெக்டர் தெரிவித்தார்?' என, கேள்வி எழுப்பிய முதல் அமர்வு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும், போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா என்பது குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டது. கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக, தமிழகம் முழுதும் பதிவான வழக்குகளின் விபரங்களை, மாவட்ட வாரியாக தாக்கல் செய்யவும், போலீசாருக்கு முதல் அமர்வு உத்தரவிட்டது.வழக்கின் விசாரணையை, இன்றைக்கு முதல் அமர்வு தள்ளிவைத்தது.