கூடலுார்: நீலகிரி மாவட்டம், கூடலுார் மண்வயல் மேலம்பலம் ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த நான்கு சிறுமியரை நேற்று முன்தினம் மாலை, கேரளாவை சேர்ந்தவர்கள் வீட்டு வேலைக்காக காரில் அழைத்து செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து மக்கள் காரை தடுத்து நிறுத்தியபோது, காரில் இருந்தவர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர்.கூடலுார் போலீஸ் விசாரணையில், சிறுமியரை கட்டாயப்படுத்தி அழைத்து செல்வது தெரிந்தது. போலீசார் வழக்கு பதிந்து, கேரளா, மலப்புரத்தை சேர்ந்த சுனீரா, 37, பைரோஜா, 37, முபாரிஸ்லால், 33, ஆகியோரை கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறுகையில், 'பாதிக்கப்பட்ட, 17 வயது சிறுமி கேரளாவில் பணிபுரிந்து வருகிறார். அவருடன், மேலம்பலம் பழங்குடி கிராமத்தை சேர்ந்த, 16, 15, 13 வயது சிறுமியரை, வீட்டு வேலைக்கு வலுக்கட்டாயமாக அழைத்து செல்ல முயன்றுள்ளனர். புகாரின்படி, மூவரை கைது செய்து, விசாரித்து வருகிறோம்' என்றனர்.