சென்னை:'தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில், ஆகஸ்ட், 7 வரை மிதமான மழை தொடரும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மையம் வெளியிட்ட அறிக்கை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவையில் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் பலத்த தரை காற்று மற்றும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே சூழல், வரும், 7ம் தேதி வரை தொடரலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாகக் காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரம், குமரிக்கடல் பகுதிகளில், வரும், 5ம் தேதி வரை மணிக்கு, 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.