உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோடிகளில் பண பரிமாற்றம்: 5 பேரிடம் ஈ.டி., விசாரணை

கோடிகளில் பண பரிமாற்றம்: 5 பேரிடம் ஈ.டி., விசாரணை

சென்னை:திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே, குமாரராஜபேட்டை, மோட்டூர் கிராமங்களில் வசிக்கும் தமிழரசன், அரவிந்தன், பிரகாஷ் என்ற மூன்று இளைஞர்களின் வீடுகளுக்கு, நேற்று காலை 8:30 மணியளவில், போலீசாருடன், 20க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர்.இளைஞர்களின் வீடுகளில் சோதனை செய்யவும் முயன்றனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், சோதனை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. 'தமிழரசன், அரவிந்தன், பிரகாஷ் ஆகியோரின் வங்கி கணக்குகளில், திடீரென கோடிக்கணக்கான ரூபாய்க்கு பண பரிவர்த்தனை நடந்துள்ளது; 80 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி, அந்த இளைஞர்களிடம் விசாரிக்க வேண்டும். அதுதொடர்பாக சோதனை நடத்த வேண்டும்' என்று, கிராம மக்களிடம் போலீசார் விளக்கினர். அதன்பின், 11:00 மணியளவில் மூன்று பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. மூவரும் சோழிங்கநல்லுாரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த திடீர் பண பரிவர்த்தனையில், அந்த கிராமங்களுக்கு அருகே வசிக்கும், இரண்டு பெண்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. டில்லியில் இருந்து, இளைஞர்களின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டு உள்ளது.இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? இந்த பணத்திற்கும், இளைஞர்களுக்கும் என்ன தொடர்பு என்ற கோணத்தில், இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேரிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை