எம்.பி.பி.எஸ்., போலி தரவரிசை தந்தை, மகன் ஏமாற்றம்
சென்னை:மருத்துவ கலந்தாய்வு தரவரிசை பட்டியலை, போலியாக தயார் செய்து, தந்தை, மகனை ஏமாற்றிய, கணினி மைய உரிமையாளரை, போலீசார் தேடி வருகின்றனர்.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு, கடந்த மாதம், 3ம் தேதியுடன் ஆன்லைனில் நிறைவடைந்தது. இட ஒதுக்கீட்டு ஆணைகள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.இன்று மாலை, 5:00 மணிக்குள், இடஒதுக்கீடு பெற்ற கல்லுாரிகளில், மாணவர்கள் சேர வேண்டும். காலியாக உள்ள இடங்களுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, 11ம் தேதி ஆன்லைனில் துவங்க உள்ளது.இந்நிலையில், நேற்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அலுவலகத்துக்கு, திருப்பத்துாரை சேர்ந்த மாணவர் ஒருவர் தன் தந்தையுடன் வந்தார். தரவரிசை பட்டியலில், என் பெயர் முன்னிலையில் இருந்தும், கலந்தாய்வில் பங்கேற்க முடியவில்லை எனக் கூறி, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.மாணவர் வைத்திருந்த தரவரிசைப் பட்டியலை, அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அது போலியானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். போலீசார் தந்தை மற்றும் மகனை அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அந்த மாணவர் நீட் தேர்வில், 425 மதிப்பெண் பெற்றுள்ளார். அந்த மாவட்டத்தில், கணினி மையம் நடத்தும் வெங்கடாஜலபதியிடம், 1.50 லட்சம் ரூபாய் கொடுத்து, மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்குமாறு கூறியுள்ளார். தரவரிசை பட்டியலில் மகன் பெயர் இல்லாததால், அதிர்ச்சி அடைந்த மாணவனின் தந்தை, வெங்கடாஜலபதியிடம் விசாரித்துள்ளார். அதைத் தொடர்ந்து, அவர் போலி பட்டியல் தயாரித்து, மாணவர் பெயரை சேர்த்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, கணினி மைய உரிமையாளர் வெங்கடாஜலபதியை போலீசார் தேடி வருகின்றனர்.