உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் அலைக்கழிப்பு; ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் தவிப்பு

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் அலைக்கழிப்பு; ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் தவிப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ரேடியாலஜி பிரிவின் கீழ் சி.டி., எம்.ஆர்.ஐ., எடுப்பதற்காக, ஆன்லைன் முறையில் மட்டுமே பணம் செலுத்த அனுமதிப்பதால், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.தமிழக மருத்துவ பணிகள் கழகத்தின் ( டி.என்.எம்.எஸ்.சி.,) கட்டுப்பாட்டில், அரசு மருத்துவமனைகளில், எம்.ஆர்.ஐ.. சி.டி., ஸ்கேன் சென்டர்கள் உள்ளன. இங்கு பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குதல், உபகரணங்கள் கொள் முதல் செய்தல் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்தும், டி.என்.எம்.எஸ்.சி., பொறுப்பில் உள்ளது.சி.டி.ஸ்கேன் எடுப்பதற்கு, 500 ரூபாயும், எம்.ஆர்.ஐ., எடுப்பதற்கு 2,500 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை, ரொக்கமாக செலுத்த அனுமதிக்கப்படுவதில்லை. யு.பி.ஐ., ஜிபே., வாயிலாக மட்டுமே செலுத்தவேண்டும். இதனால், பொதுமக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். ரொக்கமாக கையில் பணம் பெற்றால் 'மெமோ' வழங்கப்படுவதால், வேறு வழியின்றி அலுவலர்கள் 100 சதவீதம் ஆன்லைனில் மட்டுமே கட்டணம் பெறுகின்றனர்.கோவை அரசு மருத்துவமனையில், நேற்று ஒரு மணி நேரம் மட்டும் கட்டணம் செலுத்தும் முறையை பார்வையிட்டபோது, எட்டு பேர் ஆன்லைன் பரிவர்த்தனை செய்வதில், பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டதைக் காண முடிந்தது. ஒரு சிலர் ஆண்டிராய்டு போன் இன்றி, பலரிடம் உதவி கேட்டு அலைந்தனர். ஒரு சிலர் வங்கியில் பணம் இல்லை எனவும், ஆன்லைன் பரிவர்த்தனை தெரியாது என்றும் கைவிரித்ததால் அலைக்கழிக்கப்பட்டனர். குறிப்பாக, பணம் வசூலிக்கும் இடத்தில் 'நெட்வொர்க்' கிடைக்காமல் அனைவரும் கட்டடத்தை விட்டு வெளியே சென்று, பணத்தை செலுத்தி பின் ஓடி வருவதையும் காண முடிந்தது.கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலாவிடம் கேட்டபோது, '' டி.என்.எம்.எஸ்.சி., தரப்பில் இதுகுறித்த அறிவுறுத்தல்கள் இருப்பதால், ஆன்லைன் வாயிலாக பெறப்படுகிறது. முடியாதவர்களிடம் பெற்றுக்கொள்ள கூறப்பட்டுள்ளது. நெட்வொர்க் இல்லை என்ற புகார் இதுவரை வரவில்லை. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

'பட்டன் போன் தான் இருக்கு'

கண்ணன் என்பவர் கூறுகையில், ''கட்டட வேலைக்கு போறேனுங்க... பேங்குல பணம் வைக்கற அளவுக்கு எங்களுக்கு எங்க வருமானம் இருக்கு? இதுவே அவசரத்துக்கு ஒருபக்கம் கடன் வாங்கிட்டு வந்திருக்கேன். கையில காசு வாங்காம அலைய வைக்கறாங்க. எங்கிட்ட பட்டன் போன்தான் இருக்கு. யார்கிட்ட போய் கேட்கறதுன்னு தெரியலைங்க,'' என்றார்.தமிழரசி என்பவர் கூறுகையில், ''எங்க வீட்டுக் காரருக்கு ஆக்சிடென்ட் ஆகி இங்க சேர்த்திருக்கிறேனுங்க. எனக்கு போன் வச்சு பணம் அனுப்ப தெரியாது. இங்க பணம் கையில வாங்க மாட்டேங் கறாங்க. என்ன பண்றதுன்னு தெரியலீங்க,'' என்றார்.

'நிர்வாக காரணங்கள்'

தமிழக மருத்துவ பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அரவிந்த் கூறுகையில், '' நிர்வாக ரீதியான சில காரணங்களுக்காக, 70 சதவீதமாவது ஆன்லைன் வாயிலாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம். முடியாதவர்களிடம் ரொக்கமாக பணத்தை பெற்றுக்கொள்வதில் பிரச்னை இல்லை. இதுகுறித்து, அறிவுறுத்தல் வழங்கப்படும், '' என்றார். --- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி