சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள முதல்வர் மருந்தகங்கள் திறப்பதற்கு, சொந்தமாக நிலம் மற்றும் கட்டடம் வைத்துள்ள கூட் டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என, அதன் பணியாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.தமிழகத்தில், 680 கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் செயல்படுகின்றன. இந்தச் சங்கங்களில் கடன் வாங்கியவர்கள், நிலுவை தொகையை திரும்ப செலுத்த தயாராக இருந்தாலும், அதை வசூலிப்பதில் நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.இந்நிலையில், தமிழக அனைத்து வகை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் பணியாளர்கள் தொழிற்சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் நேற்று நடந்தது.இதுபற்றி, சங்கத்தின் தலைவர் பி.செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கூறியதாவது:தமிழகத்தில் பிற கூட்டுறவு சங்கங்களில் உள்ளது போன்று, அபராத வட்டி தள்ளுபடி திட்டத்தை வீட்டுவசதி சங்கங்களில் செயல்படுத்த வேண்டும். இதனால், 2014ம் ஆண்டுக்கு முன் கடன் பெற்றவர்கள், நிலுவையை தொகையை செலுத்த வாய்ப்பு ஏற்படும்.இவர்கள் நிலுவையை செலுத்துவதால் சங்கங்களுக்கு, 1,000 கோடி ரூபாய் வசூலாகும்; 5,100 பேருக்கு பத்திரங்கள் திரும்ப கிடைக்கும். சங்கங்களில் முடங்கியுள்ள சொத்துக்களை விற்பதால், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு நிதி கிடைக்கும். கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, குறைந்த விலையில் மருந்துகள், மக்களுக்கு கிடைக்க முதல்வர் மருந்தகம் திறக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.இதில், சொந்தமாக நிலம், கட்டடம் வைத்துள்ள வீட்டு வசதி சங்கங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இவை உள்ளிட்ட, 30 கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.