உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமரின் விவசாய உதவித்தொகை; 47 லட்சம் பேருக்கு பெற முயற்சி

பிரதமரின் விவசாய உதவித்தொகை; 47 லட்சம் பேருக்கு பெற முயற்சி

சென்னை; பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்ட பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.நாடு முழுதும் உள்ள விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மூன்று தவணைகளாக, தலா 2,000 ரூபாய் வீதம், ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், 47 லட்சம் விவசாய குடும்பங்கள் உதவித்தொகை பெற பதிவு செய்துள்ளன. ஆனால், 22 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே, சமீபத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டது. ஆவணங்களை முறையாக பதிவேற்றம் செய்யாததால், மற்றவர்களுக்கு உதவித்தொகை கிடைப்பது, இழுபறியாக உள்ளது. தற்போது, நாடு முழுதும் உள்ள விவசாயிகளுக்கு, ஆதார் போன்று அடையாள எண் வழங்கும் பணியை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செய்து வருகின்றன. இந்த அடையாள எண் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே, வருங்காலத்தில், மானிய உதவிகள், பயிர் இழப்பீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என, மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது. எனவே, 47 லட்சம் விவசாய குடும்பங்களுக்கு, அடையாள எண் வழங்க, திட்டமிடப்பட்டு உள்ளது. இதுவரை, 16 லட்சம் அடையாள எண்கள் வழங்கப்பட்டு விட்டன. இம்மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க, மாவட்ட கலெக்டர்கள், வேளாண்மை, தோட்டக்கலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அடையாள எண் பெற்ற அனைவருக்கும், பிரதமரின் விவசாய உதவித்தொகையை, மத்திய அரசு கட்டாயம் வழங்க வேண்டும். எனவே, அடையாள எண் வழங்கும் பணியை முழுமையாக மேற்கொள்ளும்படி, வேளாண் துறைக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த தவணை நிதியை, 47 லட்சம் விவசாயிகளுக்கு பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ