உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய சிதம்பரம் பக்தர்கள் மீட்பு

உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய சிதம்பரம் பக்தர்கள் மீட்பு

சிதம்பரம்: உத்தரகண்ட் ஆன்மிக சுற்றுலா சென்று நிலச்சரிவில் சிக்கிய, சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேர், நான்கு நாட்களுக்கு பின் ஹெலிகாப்டர் மூலம் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் 16 கால் மண்டபத் தெருவை சேர்ந்த கனகராஜ் தலைமையில் கைலாஷ் ஆன்மிக சுற்றுலாவுக்கு, கடந்த 1ம் தேதி சிதம்பரத்தில் இருந்து 28 பேர் புறப்பட்டனர். சென்னை வழியாக டில்லி சென்ற இக்குழுவினருடன், கோவையைச் சேர்ந்த இருவரும் இணைந்து கொண்டனர்.தரிசனம் முடிந்து கடந்த 4ம் தேதி திரும்பும்போது, 20 கி.மீ., தொலைவில் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அனைத்து சாலைகளும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது. தாவகட் என்ற பகுதியில், 30 பேரும் சிக்கிக் கொண்டனர்.செய்வதறியாமல் திகைத்த அவர்கள், புத்தி என்ற பகுதியில் தங்கினர். மின்சாரம் இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் சிக்கிய தகவல் உறவினர்களுக்கு தெரிந்தது.அதையடுத்து, அமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பக்தர்களின் உறவினர்கள் முறையிட்டனர். அமைச்சரின் நடவடிக்கையால், கடலுார் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தமிழக பக்தர்கள் சிக்கி இருந்த பகுதியின் கலெக்டரை தொடர்பு கொண்டு பேசினார்.அதை தொடர்ந்து, நேற்று காலை முதல் மீட்பு பணிகள் துவங்கின. காலை 10:30 மணிக்கு ஹெலிகாப்டருடன் புத்தி பகுதிக்கு சென்ற ராணுவத்தினர், அடங்கிய மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பணி மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்தது.மீட்கப்பட்ட அனைவருக்கும் டார்ஜிலாவில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. அதன்பின், அங்கிருந்து புறப்பட்டு, டில்லி வந்தனர். அங்கிருந்து இன்று மதியம் சென்னை வருகின்றனர். இவர்களை ஆன்மிக பயணத்திற்கு அழைத்துச் சென்ற, ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி கனகராஜ், மீட்புக்கு வந்த ஹெலிகாப்டரில் அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு கடைசியாக வந்தார். உடன் சென்ற அனைவரும், அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

மீட்கப்பட்டவர்கள் பேட்டி

ஒவ்வொரு நாளும் திக், திக் என நாட்கள் நகர்ந்தன. பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வு இருந்தாலும், எந்த பக்கம் செல்வதற்கும் சாலை இல்லாததால் அச்சத்துடன் இருந்தோம். இன்று காலை தான், ஹெலிகாப்டர் மூலம் நாங்கள் மீட்கப்பட்டோம்; டார்ஜிலாவிற்கு வந்து சேர்ந்தோம். மீட்பு குழுவிற்கு நன்றி.அலமேலு,சிதம்பரம்

எங்களை மீட்டு அழைத்து வந்த ராணுவத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் கலெக்டருக்கு, நாங்களும் எங்கள் குடும்பத்தினரும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளோம். எங்களை காப்பாற்றி கொண்டு வந்த உத்தரகண்ட் மற்றும் டில்லி அதிகாரிகளுக்கு நன்றி.

கனகராஜ்,சிதம்பரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ