உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உலக முதலீட்டாளர் விரும்பும் ஒரே மாநிலம் தமிழகம் தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு

உலக முதலீட்டாளர் விரும்பும் ஒரே மாநிலம் தமிழகம் தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு

சென்னை:''தமிழகத்தில் தொழில் துவக்கியுள்ள முதலீட்டாளர்கள், மற்ற தொழில் நிறுவனங்களையும் அழைத்து வாருங்கள்; தமிழக அரசின் தொழில் துறை துாதுவர்களாக எல்லாரும் மாற வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார். தமிழக அரசின் தொழில் துறை சார்பில், தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு 2024, சென்னை, ஆர்.ஏ.புரத்தில் நேற்று நடந்தது. 17,616 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள, 19 தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டை, முதல்வர் துவக்கி வைத்தார். இது தவிர, 51,157 கோடி ரூபாய் முதலீட்டில், 28 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

நம்பிக்கை

நிகழ்ச்சியில், ஸ்டாலின் பேசியதாவது:கடந்த மூன்று ஆண்டுகளில், 31 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், 9.74 லட்சம் ரூபாய் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதோடு நம் கடமை முடிந்துவிட்டது என்று இருந்து விடாமல், அந்த தொழில்களை நிறுவ தேவையான ஆதரவு சேவைகளை அளித்து வருகிறோம். இன்று, துவக்கிய திட்டங்கள் வாயிலாக, 64,968 பேருக்கும்; அடிக்கல் நாட்டிய திட்டங்கள் வாயிலாக, 41,835 பேருக்கும் வேலை கிடைக்கும். தமிழகத்தில் நிம்மதியாக தொழில் நிறுவனத்தை நடத்தலாம் என்ற நம்பிக்கை, தொழிலதிபர்களுக்கு வந்திருக்கிறது. அதன் அடையாளமாக தான் பல தொழிற்சாலைகள் உருவாகி வருகின்றன.என் அன்பான வேண்டு கோள் என்னவெனில், நீங்கள் தொழில் துவக்கினால் மட்டும் போதாது. உங்களை போன்று இருக்கிற மற்ற தொழில் நிறுவனங்களையும் தமிழகத்திற்கு அழைத்து வாருங்கள்; தொழில் துவக்க வையுங்கள். தமிழக அரசின் தொழில் துறை துாதுவர்களாக நீங்கள் எல்லாரும் மாற வேண்டும். இன்று, மோட்டார் வாகனம், பொது உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் துவங்கப்பட்டு இருக்கின்றன. இதன் வாயிலாக, 1.06 லட்சம் நபருக்கு, வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

மேலும் ஊக்கம்

இதில் சிறப்பம்சம் என்னவெனில், பெரும்பாலான வேலைவாய்ப்பு, பெண்களுக்கானவை. பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து வரும் அரசின் நடவடிக்கைக்கு, இந்த சாதனை மேலும் ஊக்கம் அளிக்கிறது. உலக முதலீட்டாளர்கள் விருப்பத்தோடு தேர்வு செய்யும் மாநிலமாக, தமிழகம் விளங்குகிறது. இதற்கு, இன்றைய நிகழ்வே எடுத்துக்காட்டு. 130க்கும் மேற்பட்ட, 'பார்ச்சூன் 500' நிறுவனங்கள், தமிழகத்தை தேர்ந்தெடுத்துள்ளன, தமிழகத்தின் முதலீட்டு ஈர்ப்பு திறனுக்கு அத்தாட்சி. இவ்வாறு அவர் பேசினார். தொழில் துறை அமைச்சர் ராஜா பேசியதாவது:மருத்துவ சாதனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு உள்ள ஜப்பானின், 'ஓம்ரான்' நிறுவனம் ஒப்பந்தம் செய்த, 393 நாட்களில் உற்பத்தியை துவக்கியுள்ளது. அந்தளவுக்கு வேகமாக தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் உதவிகளை, அரசு வழங்குகிறது. இந்தியாவில், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் தலைமையகமாக தமிழகம் திகழும்.இவ்வாறு அவர் பேசினார்.தலைமை செயலர் முருகானந்தம், தொழில் துறை செயலர் அருண் ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை