கழிப்பறையை சுத்தம் செய்யும் பணி; கைதானவர்களை பயன்படுத்த தடை: ஐ.ஜி.,க்கள் உத்தரவு
சென்னை : 'விசாரணைக்கு அழைத்து வரப்படும் சந்தேக நபர்களை, காவல் நிலைய கழிப்பறையை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது' என, இன்ஸ்பெக்டர்களுக்கு மண்டல ஐ.ஜி.,க்கள் உத்தரவிட்டு உள்ளனர். மனித உரிமை மீறல்
பாலியல் தொழில், மொபைல் போன் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் பிடிபடும் போது, அவர்களை போலீசார், காவல் நிலைய கழிப்பறையை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்துவதாக கூறப்படுகிறது. காவல் நிலையங்களை சுத்தம் செய்து, அது தொடர்பான படங்களை போலீசார், டி.ஜி.பி., அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. அதற்காக, அடிக்கடி கைதாகும் சிறைப்பறவைகள் என, அழைக்கப்படும் நபர்களையும், சந்தேகத்தில் பிடிபடும் நபர்களையும், இப்பணியில் போலீசார் ஈடுபடுத்தி வருகின்றனர். இது மனித உரிமை மீறல். அதனால், இத்தகையை பணிகளில் அவர்களை ஈடுபடுத்தக் கூடாது என, இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்களுக்கு, மண்டல ஐ.ஜி.,க்கள் உத்தரவிட்டுள்ளனர்.அவர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: காவல் நிலையங்களை சுத்தம் செய்யும் பணிக்கு, விசாரணைக்கு அழைத்து வரப்படும் நபர்களை ஈடுபடுத்துவதாக எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது. கடும் நடவடிக்கை
இதற்கான பணிக்கு, காவல் நிலைய பராமரிப்பு நிதியை பயன்படுத்த வேண்டும் என, பல முறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனியும் இந்த நிலை நீடித்தால், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.