அக்., 18 வரை வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி கரூர் கலெக்டர் தகவல்
கரூர், ஆக. 24-''கரூர் மாவட்டத்தில் அக்., 18 வரை, வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி நடை பெற உள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் தங்கவேல் பேசியதாவது:கரூர் மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணிகள் கடந்த, 20ல் தொடங்கி வரும் அக்., 18 வரை நடக்கிறது. வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி, ஓட்டுச்சாவடி நிலை அலுவலரால் மேற்கொள்ளப்பட உள்ளது. வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அட்டையில் உள்ள முரண்பாடுகள் நீக்கப்படும். இதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் அக்., 29ல் வெளியிடப்படும்.திருத்தங்கள் இருப்பின் அக்., 29 முதல் நவ., 28 வரை கால அவகாசம் வழங்கப்படும். டிச., 24க்குள் கோரிக்கை மனு மீது தீர்வு காணப்பட்டு, அடுத்தாண்டு ஜன., 6ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக இணைய வழி https//voters.eci.gov.inஎன்ற முகவரி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். 25 வயதுக்குட்பட்டோர் வயது சான்று இணைப்பது கட்டாயம். பட்டியலில் பெயர் சேர்க்கும் போது, வசிப்பிட முகவரி, வயதுக்கான சான்று இணைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், ஆர்.டி.ஓ.,க்கள் முகமது பைசல், தனலட்சுமி, மாநகராட்சி ஆணையாளர் சுதா, கலெக்டர் நேர்முக உதவியாளர் யுரேகா, தேர்தல் தாசில்தார் முருகன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர்.