சென்னை: பல்வேறு திட்டங்கள் வாயிலாக, பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்கு என, அதிகபட்ச நடவடிக்கைகள் எடுத்து வருவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் கனிமொழி மதி, காந்திமதி, ரமாமணி, வாசுகி உள்ளிட்டோர் தாக்கல் செய்த பொது நல மனு:பொது இடங்கள், பொது போக்குவரத்தில் செல்லும் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகின்றனர். தங்களுக்கு நேர்ந்த பிரச்னைகள் குறித்து, காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்கச் செல்லும் பெண்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர்.புகார் அளிக்க வரும் பெண்களை உரிய மரியாதையுடன் நடத்த, சமூக நலத்துறை அல்லது போலீஸ் உயர் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களை, அதிகாரிகள் அமல்படுத்தக் கோரி, 2018ல் மனு அளித்துள்ளோம்.பெண்கள் பாதுகாப்புக்கு பல்வேறு சட்டங்கள் இருந்தும், அவற்றை அமல்படுத்துவதில் நம்பகத்தன்மை இல்லை. பஸ், ரயில் நிலையங்களில், பெண்களுக்கு என, காவல் நிலையத்துடன் கூடிய பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க வேண்டும். பணி, கல்வி நிமித்தமாக, நள்ளிரவில் ரயில் மற்றும் பஸ் நிலையம் வரும் பெண்கள் தங்க, பாதுகாப்புடன் கூடிய விடுதிகளை அமைக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு முன் நிலுவையில் உள்ளது. வழக்கில் அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் அறிக்கை தாக்கல் செய்தார். அதன் விபரம்:பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் பெண்கள் வசதிக்காக, மாநிலம் முழுதும் 2,028 தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், ஒரு லட்சத்து 7,594 பெண்களுக்கு பாதுகாப்பான இருப்பிடங்கள் உள்ளன.திருப்பூர், திருவள்ளூர், கடலுார், திருச்சி, புதுக்கோட்டை, சென்னை, மதுரை, கிருஷ்ணகிரி, துாத்துக்குடி, கோவை, காஞ்சிபுரம் ஆகிய நகரங்களில், வேலை செய்யும் பெண்களுக்காக 11 தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியுள்ளனர்.விடுதியில், 'சிசிடிவி' போன்ற பல்வேறு பாதுகாப்பு வசதிகளும் உள்ளன. பெண்கள் பாதுகாப்புக்காக, '181' என்ற 24 மணி நேரமும் இயங்கும் உதவி எண் செயல்படுகிறது. மத்திய அரசின் நிதி வாயிலாக, தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, 50க்கும் மேற்பட்ட விடுதிகள் நடத்தப்படுகின்றன. 'நிர்பயா' நிதி வாயிலாக, பொது இடங்களில் பாதுகாப்பு வசதிகள், பெண்கள் உதவிக்கு இலவச தொலைபேசி மையம் போன்ற பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.