10 அரசு சேவைகளை இணைய வழியில் பெறலாம்
சென்னை: 'எளிமை ஆளுமை' திட்டத்தின் கீழ், 10 அரசு சேவைகளை எளிமையாக மக்கள் பெறுவதற்கான இணைய வழி சேவையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.இத்திட்டத்தின் கீழ், எட்டு அரசு துறைகளின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் பெறுவதற்கான வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டில் பல்வேறு துறைகளில், 150 சேவைகள் இணைய வழியில் வழங்கப்படும். முதல் கட்டமாக, கீழ் வரும் 10 சேவைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளன. சுகாதார சான்றிதழ்
ஒரு வளாகம், பொது மக்களின் சுகாதாரத்திற்கு எந்தவிதமான ஆபத்தையும் ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்ய, சுகாதார சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இச்சான்றிதழ் தேவைப்படும் வளாகங்களுக்கு, 'கியூஆர்' குறியீட்டுடன், அந்த வளாகங்களின் பொறுப்பாளர்கள் உறுதிமொழி அடிப்படையில், உடனடியாக இணையதளத்தில் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பு சான்றிதழ் பெற, மூன்று மாதங்களாகும்; தற்போது, ஒரே நாளில் பெறும் வகையில் எளிமையாக்கப்பட்டு உள்ளது. பொது கட்டட உரிமம்
கட்டட உரிமம் சான்றிதழ் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது. தற்போது, கட்டட உறுதித்தன்மை சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள காலம் வரை, உரிமம் செல்லுபடியாகும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முன்பு உரிமம் பெற, மூன்று முதல் ஆறு மாதங்களாகும்; தற்போது, ஒரே நாளில் இணையதளத்தில் பெற வழி செய்யப்பட்டுள்ளது. முதியோர் இல்ல உரிமம்
முதியோர் இல்லங்கள் பதிவு செயல்முறை, சுய சான்றிதழ் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது. சான்றிதழில் கால வரம்பு, மூன்று ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பு உரிமம் பெற, ஆறு முதல் எட்டு மாதங்களாகும்; தற்போது, ஒரே நாளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகளிர் விடுதிகள் உரிமம்
உரிமத்திற்கான கால வரம்பு, மூன்று ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. முன்பு உரிமம் பெற, ஆறு மாதங்கள் முதல் ஓராண்டாகும்; தற்போது, ஒரே நாளில் பெறும் வகையில் விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளன. மகளிர் இல்லங்கள் உரிமம்
இதற்கு உரிமம் பெறும் முழு செயல்முறை எளிமையாக்கப்பட்டு உள்ளது. உரிமத்திற்கான கால வரம்பு, மூன்று ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு உரிமம் பெற, ஆறு மாதங்கள் முதல் ஓராண்டாகும்; தற்போது, ஒரே நாளில் பெற வழி செய்யப்பட்டு உள்ளது. சொத்து மதிப்பு சான்றிதழ் நீக்கம்
இது, பெரும்பாலும் நிலத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், ஒருவரின் நிதி நிலையை உறுதிப்படுத்த, வங்கி இருப்பு நிலை அறிக்கை, ஆடிட்டர் சான்றிதழ், வருமான வரி தாக்கல் போன்ற மாற்று வழிகள் உள்ள நிலையில், சொத்து மதிப்பு சான்றிதழ் நீக்கப்படுகிறது. வெள்ளை வகை தொழிற்சாலைகள் பட்டியல் விரிவாக்கம்
மாசுபடுத்தாத அல்லது குறைந்த மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் வெள்ளை வகை என அங்கீகரிக்கப்படுகின்றன. இவற்றுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி, வழக்கமான ஆய்வு சுமைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வகை தொழிற்சாலைகள் பட்டியல், 37ல் இருந்து 609 ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைகளை துவக்க, மாசு கட்டுப்பாடு வாரிய அனுமதி பெற தேவையில்லை. புன்செய் நிலத்துக்கு தடையின்மை சான்றிதழ்
புன்செய் நிலத்தை, விவசாயம் அல்லாத பிற தேவைகளுக்கு, அதாவது குடியிருப்பு, வணிக வளாகம் கட்டுமானத்திற்கு பயன்படுத்த, வேளாண்மை துறையிடம் தடையின்மை சான்றிதழ் பெறுவது கட்டாயம். அந்த வேலைகள் இப்போது முழுதும் இணைய வழிக்கு மாற்றப்பட்டுள்ளது. வேளாண் துறையினர் ஆய்வு செய்து, 21 நாட்களுக்குள் முடிவு சொல்லாவிட்டால், தடையின்மை சான்றிதழ் தானாகவே உருவாக்கி வழங்கப்படும். நன்னடத்தை சான்றிதழ்
இதற்கு தனி நபர்கள், அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்து, அங்கிருந்து போலீஸ் சரிபார்ப்புக்காக அனுப்பப்படும். இனி நன்னடத்தை சான்றிதழை, இணைய வழியில் எளிமையாக பெறலாம். அரசு ஊழியர் தடையின்மை சான்றிதழ்
புதிய விதிமுறைகளின்படி, ஒரு அரசு ஊழியர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க, உயர் அதிகாரிகளுக்கு முன் தகவல் அளித்தல், அரசிடம் தடையின்மை சான்றிதழ் பெறுதல், துறையிடம் இருந்து அடையாள சான்றிதழை சமர்ப்பித்தல் ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்ய வேண்டும்.இவ்வாறு படிப்படியாக, மேலும் பல சேவைகளை எளிமையாக்கி வழங்க, அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் தெரிவித்தார்; பலருக்கு சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கயல்விழி, தலைமை செயலர் முருகானந்தம், மனிதவள துறை செயலர் பிரகாஷ் கலந்து கொண்டனர்.