உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வி.ஐ.டி., சென்னை பல்கலையில் 13வது பட்டமளிப்பு விழா

வி.ஐ.டி., சென்னை பல்கலையில் 13வது பட்டமளிப்பு விழா

திருப்போரூர்:கேளம்பாக்கம் - வண்டலுார் சாலை, மேலக்கோட்டையூரில் உள்ள வி.ஐ.டி., சென்னை பல்கலையில், 13வது பட்டமளிப்பு விழா நடந்தது. வி.ஐ.டி., பல்கலை நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமை வகித்தார். விழாவில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தியாகராஜன், 39 மாணவ --- மாணவியருக்கு தங்க பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கினார். இளங்கலை, முதுகலையில், 6,468 பேர், ஆராய்ச்சி பிரிவில் 113 பேர் என, 6,581 மாணவ - மாணவியர் பட்டங்கள் பெற்றனர். கல்வியே ஆணிவேர் விழாவில், அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது: கல்விதான் திராவிட சித்தாந்தத்தின் ஆணிவேர். சமூக நீதி, சமத்துவம் என அனைத்தும், அனைவருக்குமான சீரான கல்வியில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. தமிழகத்தில், 100 ஆண்டு களுக்கு முன்பே அனைவருக்கும் கட்டாய கல்வி தரப்பட்டது. யார் எங்கிருந்து வந்தாலும், அவர்கள் அனைவருக்கும் கட்டாயமாக கல்வி அளிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் அதிவேக பொருளாதார வளர்ச்சி ஏற்பட முக்கியமான காரணம், பெண்களுக்கு கல்வி வழங்கி, அவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிவது தான். தமிழகத்தில் மின்னணு மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான பெண்கள் பணிபுரிகின்றனர். தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சட்டம், வரலாறு, இலக்கியம் போன்ற துறைகள் இருப்பது மிக முக்கியம். நம் வாழ்வில் எந்த வெற்றியும் நிரந்தரமல்ல, எந்த தோல்வியும் ஈடுசெய்ய முடியாதது அல்ல. எனவே, மாணவ - மாணவியர் வாழ்வில் எத்தகைய வெற்றியை பெற்றாலும் பணிவுடன் இருக்க வேண்டும். தோல்வி அடைந்தாலும் துவண்டு விடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார். வி.ஐ.டி., பல்கலை வேந்தர் கோ.விசுவநாதன் பேசியதாவது: உயர் கல்வியில் மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் 27 சதவீதம் மட்டுமே. அது, 50 சதவீதமாக உயர வேண்டும். உயர்கல்வி மூலம் மட்டுமே, 2047ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்க முடியும். உயர் கல்வியில் இந்தியா வின் மொத்த சேர்க்கை விகிதம் 28 சதவீதமாக உள்ளது. ஆனால், கல்விக்கு 2.5 சதவீத நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு முதலீடு இந்தியாவில், 2 சதவீத மக்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர். ஜப்பானில் 57 சதவீதம், அமெரிக்காவில் 43 சதவீதம், சீனாவில் 10 சதவீதம் பேர் வருமான வரி செலுத்துகின்றனர். மாணவர்கள் இந்தியாவில் முதலீடு செய்து நிறுவனங்களைத் தொடங்குங்கள்; அப்போது தான் இந்தியா வளர்ந்த பொருளாதார நாடாக மாறும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், வங்கதேச துணை துாதர் ஷெல்லி சலேஹின், வி.ஐ.டி., பல்கலை துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், துணை வேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், சென்னை இணை துணை வேந்தர் டி.தியாகராஜன். வேலுார் இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மாலிக், பதிவாளர் டி.ஜெயபாரதி, கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், வேந்தரின் ஆலோசகர் எஸ்.பி.தியாகராஜன் உட்பட பலர் பங்கேற் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை